மோகனூர்: மோகனூர் காவல் எல்லைக்குட்பட்ட கோழிப் பண்ணையாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி, மோகனூரில் நடந்தது. இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோழிப்பண்ணைகளில், வட மாநிலங்களை சேர்ந்த அதிகமான நபர்கள், கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலைகளில் பணியாற்றுகின்றனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வேலையில் சேர்க்கும் போது, உரிய ஆவணங்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி பாஸ் புத்தகம் உள்ளிட்ட நிரந்தர முகவரி உள்ள அடையாள அட்டைகளின், நகல் வாங்கி கொண்டு தான் பணியில் சேர்த்து வேண்டும். மேலும், அவர்களின் செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். அதில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். முக்கியமான பகுதிகளில், மற்றும் கோழிப் பண்ணைகளை சுற்றியும் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும். வேலையில் சேரும் நபர்களுக்கு தெரியாமல், தரகர்களிடம் அளவுக்கு அதிகமான முன் பணம் கொடுப்பதையும், அவ்வாறு கொடுத்த பணம் வரவில்லை எனில் கொத்தடிமை தனமாக நடத்துவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுற்று வட்டாரத்தை சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள், மேலாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.