அரக்கோணம்:அரக்கோணம் அருகே, மாமியாரை அடித்துக் கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நாகவேடை சேர்ந்தவர் குப்பன், 72. கூலித்தொழிலாளி. இவர் மனைவி புஷ்பா, 63. மகன் ரமேஷ், 39. அவர் மனைவி, ரேவதி, 32.
ரமேஷ் கூலி வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்ததை அவர் மனைவி ரேவதி தட்டிக் கேட்டதால் தகராறு நடந்து வந்தது. கடந்த 14 ம் தேதி மீண்டும் தகராறு நடந்தது.
இதை பார்த்த மாமியார் புஷ்பா மருமகள் ரேவதியை கண்டித்தார்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்டம், கூவம் பகுதியில் உள்ள தன் தம்பி சதிஷ்குமாரிடம், ரேவதி கூறினார்.ஆத்திரமடைந்த சதிஷ்குமார், அவர் தந்தை நீலமேகம் உறவினர்கள் பாலாஜி, தட்சிணாமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோருடன் கடந்த 25 ம் தேதி ரேவதி வீட்டுக்கு வந்து மாமியார் புஷ்பாவிடம் தகராறு செய்தனர்.அப்போது, வாக்கு வாதம் முற்றி கட்டையால் சதிஷ்குமாரும் உறவினர்களும் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த புஷ்பாவை அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் இன்று காலை 5:00 மணிக்கு இறந்தார்.அரக்கோணம் போலீசார் சதிஷ்குமார், 30, பாலாஜி, 24, தட்சிணாமூர்த்தி, 38, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மருமகள் ரேவதியை தேடி வருகின்றனர்.