சேலம்:''நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு 'கேமரா'க்கள் பொருத்தப்படும்,'' என, மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நேற்று சேலத்தில் நடந்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டத்தில், ஏழு மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். இதில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் பேசியதாவது:இந்தியாவில் மிக அதிகமாக நகர்ப்புற கட்டமைப்புகளை கொண்ட மாநிலம் தமிழகம். இங்கு, 50 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 6.25 கோடி வாக்காளர்களில், 3 கோடி பேருக்கு ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.அடுத்த நான்கு மாதங்களில், நகர்ப்புற தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்குள் சிறப்பாக தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதனால், கலெக்டர்கள் தேர்தல் விதிமுறை குறித்து தீவிர பயிற்சி அளிக்க வேண்டும்.
நடந்து முடிந்த தேர்தலில், கண்காணிப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.அதேபோல், நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல்களில், அனைத்து ஓட்டுச்சாவடி, ஓட்டு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர்கள், சேலம் - கார்மேகம், தர்மபுரி - திவ்யதர்ஷினி, கிருஷ்ணகிரி - ஜெயச்சந்திர பானுரெட்டி, நாமக்கல் - ஸ்ரேயாசிங், கரூர் - பிரபு சங்கர், திருப்பத்துார் - அமர்குஷ்வாஹா, கள்ளக்குறிச்சி - ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.