சென்னை-சென்னையில், மழைக்கு சேதமடைந்த சாலைகளை தற்காலிகமாக சீரமைப்பு செய்ய, ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டாம் என்றும், ஊழியர்களை வைத்து அதிகாரிகளே நேரடியாக பணிகளை செய்ய வேண்டும் என்றும், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, 15 மண்டலங்களுக்கும் சேர்த்து, 1.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழையால், சென்னையில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்தள்ளன. குறிப்பாக, அண்ணா சாலையில், கிண்டி அருகே சாலையில் இருந்த பள்ளத்தால், இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல சாலைகள், மழை காரணமாக சேதமடைந்தும், பள்ளம் ஏற்பட்டும் உள்ளன. அபாயம்கண்ணம்மாபேட்டையில், மின் வாரிய பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுமையாக சீரமைக்கப்படாததால், தற்போது அங்கு பள்ளமாக காட்சியளிக்கிறது. அதேபோல், மேடவாக்கம் - சோழிங்கநல்லுார் பிரதான சாலையிலும், குடிநீர் வாரியத்தால் தோண்டப்பட்ட பள்ளம் சீரமைக்கப்படாததால் பள்ளம் ஏற்பட்டிருப்பதாக, நம் நாளிதழ் சுட்டிக்காட்டி நேற்று செய்தி வெளியிட்டது.இதுபோன்ற பள்ளங்களால், மழை நீர் வடிந்தோடாமல் தேங்குவதுடன், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இதனால், சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க, மண்டல அலுவலர்களுக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.குறிப்பாக, பணிகளை ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மேற்கொள்ளாமல், அதிகாரிகளே நேரடியாக பணியாளர்களை கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில், மழையால் பொதுமக்கள் பாதிக்காதவாறு பணிகளை மேற்கொள்ளவும், சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மாநகராட்சி தயார்இதன்படி, மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும், தலா 10 லட்சம் ரூபாய் என, 1.50 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளோம்.இந்த நிதி வாயிலாக, மாநகராட்சியால், 387 கி.மீ., நீளமுள்ள 471 பேருந்து சாலைகள், 5,270 கி.மீ., நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் இடையூறின்றி செல்ல ஏதுவாக, பள்ளத்தை உடனடியாக சீரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நிதி வழங்கவும் மாநகராட்சி தயாராக உள்ளது.தற்போது வரை, 942 சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, கண்டறியப்பட்டுள்ளது. இச்சாலைகளில் பணிகளை மேற்கொள்ளும்போது, பள்ளம் மற்றும் குழி உள்ள இடங்களை தேவையான அளவு ஆழத்திற்கு தோண்டி எடுத்து, ஜல்லி கலவை, சிமென்ட் கான்கிரீட் கலவை அல்லது குளிர்ந்த தார் கலவை கொண்டு சரியான முறையில் நிரப்பப்பட வேண்டும்.இப்பணிகளை மேற்கொள்ள, 250 டன் குளிர்ந்த தார் கலவை கையிருப்பில் உள்ளது. மேலும், 250 டன் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லி கலவை, கான்கிரீட் கலவை தேவையான அளவிற்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.மரங்கள் சாய்வதால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, மரக்கிளைகளை உடனடியாக வெட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணிகள் நடந்து மழைநீர் வடிகால்களில், கம்பிகள் வெளியே தெரியும் வகையில், அபாயமாக காட்சி அளிக்கும் பகுதிகளில், விபத்துகள் ஏற்படாத வகையில் தடுப்பு வேலிகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இதுபோன்ற பணிகள் குறித்து, தினசரி அறிக்கை அளிக்கவும், மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மரங்கள் எவ்வளவு?சென்னை மாநகராட்சி பேருந்து மற்றும் உட்புற சாலைகளில், 34 ஆயிரத்து 224 சாலைகளில், 1 லட்சத்து 75 ஆயிரத்து 309 மரங்கள் உள்ளன. இவற்றில் போக்குவரத்து இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட உள்ளன.24 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!சென்னையில் தினசரி, 5,200 டன் குப்பை சேகரிக்கப்பட்டு, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று அதிகளவில் குப்பை சேகரமாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, பட்டாசு குப்பையை அகற்ற, ஜே.சி.பி., மற்றும் லாரிகள் போன்ற குப்பை அகற்ற தேவையான வாகனங்கள் தயார் நிலையில் இருக்க, அந்தந்த பகுதிகளில் குப்பை கையாளும் தனியார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பட்டாசு குப்பைகளை, 24 மணி நேரத்தில் அகற்றி, மணலி அருகே உள்ள மாநகராட்சி மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.49 இடங்களில் நீர்த்தேக்கம்!சென்னையில் நேற்று முன்தினம் முதல், நேற்று வரை 49 இடங்களில் மழை நீர் தேங்கியது. அதில், 36 இடங்களில் உடனடியாக மழைநீர் அகற்றப்பட்டு உள்ளது. மீதமுள்ள இடங்களில், மழை நீர் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதேபோல், 16 சுரங்கப்பாதைகளில், மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.210 இடங்களில் தடுப்பு!கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில், 751 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுவரை, 125 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளபட்டுள்ளது. இதில், 116 கி.மீ., நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள, 9 கி.மீ., பணிகள் நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, 210 இடங்களில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.தகவல் அளிக்கலாம்!சாலை பள்ளம் மற்றும் போக்கு வரத்து இடையூறு, பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் குறித்து, 1913 என்ற எண்ணிற்கும், 044 - 2561 9206; 2561 9207; 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும், வட்டார துணை கமிஷனர் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் தகவல் தெரிவிக்கலாம்.
எம்.எல்.ஏ., சென்று வர வேண்டும்!தாம்பரம் முடிச்சூர் சாலையில், பருவமழை துவங்கிய நிலையில், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சாலையில் மரண பள்ளங்கள் ஏற்பட்டு, ஒருவழி போக்குவரத்தால், அச்சாலையில் 1 கி.மீ., பயணிக்க, 30 நிமிடங்கள் வரை ஆகிறது. காலை, மாலை 'பீக் ஹவர்' நேரங்களில், 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுக்கின்றன.
இச்சாலையில், பழைய தாம்பரத்தில் வசித்து வரும் எம்.எல்.ஏ., - எஸ்.ஆர்.ராஜா, 'பீக் ஹவர்' நேரத்தில், முடிச்சூர் சாலையில் பயணிக்க வேண்டும் என்றும், மழை தீவிரமடையும் முன், சாலையை சீரமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.