கீழ்கட்டளை -நாராயணபுரம் ஏரி போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், மடிப்பாக்கம், சுண்ணாப்புக் கொளத்துார் பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன.
கீழ்கட்டளை ஏரி நிரம்பினால், அதன் உபரி நீர் பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில் சேகரமாகி அங்கிருந்து சதுப்பு நிலப் பகுதிக்கு செல்லும் வகையில் போக்கு கால்வாய் உள்ளது.இந்த கால்வாய் ஆவணப்படி, 4 கி.மீ., நீளம், 80 மீட்டர் அகலம் உடையது. பெரும் பகுதி ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கீழ்கட்டளை- - நாராயணபுரம் இடையேயான போக்கு கால்வாயின் பெரும் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நம் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது.இதையடுத்து, 80 சதவீத ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, 17 கோடி ரூபாயில் மதில்சுவர் கட்டுமான பணி நடக்கிறது. அரசியல் அழுத்தம், மேலிட சிபாரிசு ஆகியவற்றின் காரணமாக மீதமுள்ள, 20 சதவீத ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் கண்டுக்கொள்ளாமல் விட்டனர்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பின. பல ஏரிகளின் நீர் கீழ்கட்டளை ஏரியில் சேகரமாக போக்கு கால்வாய் வழியே வெளியேற துவங்கியது.போக்கு கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ள பகுதியில் உபரி நீர் உள்வாங்க முடியாததால் அருகில் உள்ள மடிப்பாக்கம், சுண்ணாம்புக் கொளத்துார் பகுதிகளான இன்ஜினியரிங் அவென்யூ, நீதிபதிகள் குடியிருப்பு, காகிதபுரம் ஆகிய பகுதிகளில் தஞ்சமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
அப்பகுதி நலச்சங்கத்தினர் இதுதொடர்பான தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பினர்.பல்லாவரம் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகாரிகள் மெத்தனம்பாதிக்கப்பட்ட பகுதி நலச்சங்கத்தினர் கூறியதாவது:ஒரு சில ஆக்கிரமிப்பாளர்களின் லாபத்திற்காக, பல நுாறு பட்டா நிலத்தில் குடியிருப்போர் ஆண்டுதோறும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறோம்.கனமழை காலத்தில் குடியிருப்புகள், சாலைகளில் மழைநீர் புகுந்து பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆக்கிரமிப்புக்களை அகற்ற 2017ம் ஆண்டே 'நோட்டீஸ்' வழங்கியும், இன்றளவில் ஆக்கிரமிப்பு அகற்றாதது ஏன்?மீண்டும் கனமழை பெய்தால், எங்கள் நிலைமை படுமோசமாகி விடும்.
எனவே, கீழ்கட்டளை- நாராயணபுரம் போக்கு கால்வாய் முழுதும், 80 அடி அகலத்தை முழுமையாக மீட்க வேண்டும். 'நோட்டீஸ்' வழங்கி மெத்தனமாக செயல்பட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்கு கால்வாயை ஆக்கிரமிப்பாளர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.