அம்பத்துார் : சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால், 590 ஏக்கர் பரப்பிலான கொரட்டூர் ஏரி, கழிவு நீர் கலக்கும் குட்டையாக மாறியுள்ளது.
ஏரிக்கரை ஆக்கிமிரப்புகள், மோசமான பாதாள சாக்கடை திட்டம், அதிகாரிகளின் பாராமுகம் உள்ளிட்ட காரணங்களால், சென்னையில் கனமழை கொட்டி தீர்த்த போதும், அந்நீரை சேமிக்க வழியின்றி, பல டி.எம்.சி., தண்ணீர் வீண் வெள்ளமாக வழிந்தோடியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளால், அம்பத்துார் மண்டலத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் குடிநீர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது. அம்பத்துார் மண்டலம், கொரட்டூரில், 590 ஏக்கரில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் கொரட்டூர் ஏரி உள்ளது.எனினும்,
இதில் துாய்மை பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த மண்டலம், பல அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்கள் என, வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கான, குடிநீர் தேவைக்கான, நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக, கொரட்டூர் மற்றும் அம்பத்துார் ஏரிகள் உதவுகின்றன. ஆனால், தமிழக அரசின் நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், இந்த ஏரிகளின் பராமரிப்பு கேள்விக்குறியாகி, அவை கழிவு நீர் குட்டையாக மாறியுள்ளன. உத்தரவுகுறிப்பாக, கொரட்டூர் ஏரியில், 2015ம் ஆண்டு முதல், மழை நீர் சேமிப்பு என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது.
இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், 0.4 டி.எம்.சி., நீரை இருப்பு வைக்க முடியும். ஆனால், அம்பத்துார் மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள், அடுக்குமாடியிருப்புகளின், ஒட்டுமொத்த கழிவு நீரும், இந்த ஏரியில் தேங்கும் அவலம், இன்று வரை தொடர்கிறது.அதை தடுத்து, ஏரியை மீட்க, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம், 2016ம் ஆண்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், ஏரியில் கழிவு நீர் விடுவதை தடுக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தொடுத்தது.
அதை விசாரித்த தீர்ப்பாயம், கழிவு நீர் விடுவதை தடுக்க, அதே ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும், நீர்வளத்துறை, சென்னை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, குடிநீர் வாரியம் மற்றும் வருவாய்த் துறையினர், அந்த உத்தரவை கண்டு கொள்ளவே இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, குடியிருப்புகளை பாதுகாக்கிறோம் என்று, ஏரி கரையை உடைத்து, அம்பத்துாரின் மொத்த கழிவுநீரையும், ஏரிக்குள் விடுவது வழக்கமாக்கி விட்டது. இதனால், சம்பந்தப்பட்ட துறைகளுடன், ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தின் போராட்டம், தொடர்கிறது.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு, சென்னை மாவட்ட கலெக்டர், நீர்வளத்துறை, மாநகராட்சி, குடிநீர் வாரியம், சென்னை ஐ.ஐ.டி., மத்திய - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், அம்பத்துார் சிட்கோ உள்ளிட்ட, 12 துறைகளின் முக்கிய அதிகாரிகள் அடங்கிய, ஒருங்கிணைப்பு குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.அந்த குழு, மனுதாரர்களின் கோரிக்கை விபரங்களை பெற்று, ஏரி பாதுகாப்புக்கான செயல் திட்ட அறிக்கையை தயாரித்து, தலைமை செயலரிடம் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு நடைமுறையில் உள்ளது.ஆனாலும், ஏரியில் கழிவுநீர் கலக்கும் செயலுக்கு,
இதுவரை தீர்வு காணப்படாமல் உள்ளது.வருத்தம்இந்த நிலையில், இந்தாண்டும் கொரட்டூர் ஏரிக்கு கூடுதலாக கிடைத்த மழைநீர் சேமிக்க வழியின்றி, வழக்கம் போல் வீணானது. அந்த வகையில், நேற்று வரை வினாடிக்கு, பல ஆயிரம் கன அடி நீர் வீதம், ஏரி முழுமையாக நிரம்பினால், இருப்பு வைக்க வேண்டிய அளவு நீர் சேமிக்க வழியின்றி வெள்ள நீராக வெளியேற்றப்பட்டது.
அதனால், ஏரியின் மேற்கு பகுதி, தாவரம் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் நிறைந்த குட்டையாகி விட்டது. பருவ மழை ஓய்ந்த பிறகு, ஏரியில் மிஞ்சப்போவது கழிவு நீர் மட்டுமே என, அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால், அடுத்தாண்டு மார்ச்சில் கொரட்டூர் ஏரி முழுமையாக வறண்டு விடும். அம்பத்துார் மண்டலத்தில், அம்பத்துார், கொரட்டூர் ஏரிகள் உட்பட, 12 நீர் நிலைகள் இருந்தும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவை கேள்விக்குறியாகவே உள்ளது.
கொரட்டூர் ஏரியை துார் வார வேண்டும். 'ஏரியில் இருந்து, மொத்தமாக வெளியேறும் நீரை தடுக்க, மாதனாங்குப்பம் அருகே உள்ள, கலங்கலின் உயரத்தை அதிகரித்து, அங்குள்ள கரையை பலப்படுத்த வேண்டும்' என, ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கமும், பொதுமக்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், அரசும், நீர்வளத்துறையும், அதற்கான, ஆலோசனையைக்கூட நடத்தவில்லை என்பது, ஏரியின் தற்போதைய நிலையை பார்த்தால் கண்கூடாகத் தெரியும் என, சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
கூவம் போல் மாறிவிடும்தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்தும் வகையில், ஏரியை முழுமையாக மீட்பதற்கான, மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை, அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், தனியார் ஆக்கிரமிப்புகளில் சிக்கி, நிலத்தடி நீர் ஆதாரத்திற்கான ஏரி முழுவதும் கழிவுநீர் குட்டையாகி விடும். அதன் பிறகு, கூவம் சீரமைப்பு போன்றுதான், இதுவும் பகல் கனவாகி விடும்.
அதனால், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், கழிவுநீரகற்று நிலையம் செயல்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் என, அரசுத்துறைகளின் ஒருங்கிணைந்த பணியால்தான், கொரட்டூர் ஏரியை குடிநீர் ஏரியாக மீட்க முடியும் என நம்புகிறோம்.- ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கம், கொரட்டூர்.ஒரு குடம் குடிநீர் ரூ.8கொரட்டூரில் ஏரி இருந்தும், நீராதாரம், 'கானல்' நீராகி விடுவதால், அங்குள்ள மக்கள், தங்களின் அன்றாட தேவைக்கு, 1 குடம் குடிநீரை, 8 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தும் நிலைதான் உள்ளது.
வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றவர்கள், தெருக்களில் உள்ள டேங்கில் நிரப்பப்படும் குடிநீர், அல்லது டேங்கர் லாரிகள் வாயிலாக வினியோகிக்கப்படும் குடிநீரை பெறும் நிலையில் உள்ளனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தும், அனைத்து பகுதி மக்களுக்கும் தேவையான குடிநீர் வினியோகம் இல்லை என, ஆதங்கப்படுகின்றனர்.
கால்வாய்கள் மாயம்அம்பத்துார் மண்டலத்தில், பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் கழிவு நீரகற்று நிலையங்கள், சரியாக செயல்படாததால், அனைத்து கழிவு நீரும், பிரதான கால்வாய் வழியாக, கொரட்டூர் ஏரிக்குள் பாய்கிறது. மழை வெள்ளத்தின் போது, குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்தும், கழிவு நீர் திறந்து விடப்பட்டு, ஏரிக்கு செல்கிறது. கடந்த, 15 ஆண்டுகளில், கொரட்டூர் ஏரிக்கான, 10க்கும் மேற்பட்ட மழை நீர் வரத்து இணைப்பு கால்வாய்கள், தனியாரின் ஆக்கிரமிப்பில் மாயமாகி விட்டன. அவற்றை மீட்க அரசுத்துறைகள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை.
திட்டம் அம்போ?
கடந்த, 2015ம் ஆண்டு, தமிழக அரசு, அம்பத்துார் ஏரி, கொரட்டூர் ஏரி மற்றும் மாதவரம் - ரெட்டேரி ஆகியவற்றை, 85 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்த திட்டமிட்டது. அதன் மூலம், ஏரிகளின் எல்லையை வரையறுத்து, கழிவு நீர் பாய்வதை தடுத்து, கரைகள் உயர்த்தி, பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நடை பயிற்சி மேடை, சிறுவர் பூங்கா, ஓய்வறை, அலங்கார பூங்கா, குடிநீர் மையம், சிறுவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி வாகன வசதி, பறவைகள் சரணாலயம், படகு சவாரி உள்ளிட்ட, பல்வேறு சிறப்பு அம்சங்களால், மூன்று ஏரிகளும் சுற்றுலாத்தலமாக்கப்படும் என, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதற்காக, முதற்கட்டமாக, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அந்த மூன்று ஏரிகளிலும், கரைகள் அமைத்து, கற்கள் பதித்து, 50 சதவீத பணிகள் மட்டுமே நடந்தன. ஆக்கிரமிப்புகள் கூட முழுமையாக அகற்றப்படவில்லை. தற்போது, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள, தி.மு.க., அரசும் இப்பகுதி மக்களின் பிரச்னையில் பாராமுகம் காட்டுவது, மேலும் வேதனை அளிப்பதாக, அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.