கோவை: நான்காண்டுகளுக்கு முன் இதே நாளில், பேனர், அலங்கார வளைவு கலாசாரத்துக்காக, இளைஞர் ஒருவரை கோவை பலிகொடுத்தது நினைவில் இருக்கிறதா உங்களுக்கு?
கடந்த 201௭ம் ஆண்டு டிச., 3ம் தேதி நடைபெறவிருக்கும் எம்.ஜி.ஆர். நுாற்றண்டு விழாவுக்காக, ஒரு வாரத்துக்கு முன்பே, கோவை நகரின் சாலைகள் பேனர்களால் மூச்சுத்திணறடிக்கப்பட்டிருந்தன. எங்கு திரும்பினாலும் பேனர்கள். ஆங்காங்கு அலங்கார வளைவுகளும் நிறுவப்பட்டிருந்தன.
ஏராளமான கனவுகளுடன் அமெரிக்காவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்த, கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த இளைஞர் ரகுபதி ஊர் திரும்பியிருந்தார். திருமணத்துக்காக பெண் பார்க்க வந்திருந்த அவருக்கு, அலங்கார வளைவு, மரணவளைவாக மாறியது. அவிநாசி சாலையில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் நீட்டியிருந்த மூங்கில், அவர் ஓட்டி வந்த பைக்கைத் தடுமாறச் செய்யவே, பின்னால் வந்த லாரி, அவரை உருத்தெரியாமல் நசுக்கிப் போட்டது.ஓர் குடும்பத்தின் நம்பிக்கை மிகுந்த எதிர்காலம், தார்ச்சாலைக்கும், லாரியின் டயர்களுக்கும் நடுவே நசுங்கிப் போனது.
வழக்கம்போல அரசு இயந்திரங்கள் தங்கள் மீது தவறில்லை என நிரூபிப்பதற்கான அத்தனை அஸ்திரங்களையும் பிரயோகிக்க, அரசியல்வாதிகள் மாறி மாறிக் குற்றம்சாட்ட, நீதிமன்ற உத்தரவை எப்படி அப்பட்டமாக மீறினார்கள் என ஊடகங்கள் கதறித் தீர்க்க, சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளிக்க, இவை எதுவுமே மாண்டுபோன அந்த உயிரைத் திருப்பிக் கொண்டு வரவில்லை.
மறதி நம் வாடிக்கை
சிறிது காலம் இந்த பேனர் கலாசாரம் பேசுபொருளாக இருந்து மறந்து போனது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், 'என்னை வரவேற்க பேனர்கள் வைக்கக் கூடாது' என, கட்சித் தொண்டர்களுக்கு உத்தரவிட்டார். அது ஓரளவுக்கு பலனளிக்கவே செய்தது. ஆனாலும், ஆர்வக்கோளாறு தொண்டர்கள் பொருட்படுத்தவில்லை. அவ்வப்போது பேனர் கலாசாரம் தலைதுாக்கவே செய்தது.
ஆசுவாசம்
ஒரு நல்ல மாற்றமாக, கடந்த இரு தினங்களாக முதல்வர் ஸ்டாலின் கோவையில் முகாமிட்டிருந்த போதும், பேனர்களை பெரிய அளவில் காணமுடியவில்லை. போஸ்டர்களும், கொடிகளும் கூட அதிகமில்லை. ஆங்காங்கு தென்பட்டாலும், இந்த மாற்றம் கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கிறது. ஆனால், இது போதாது.
ஆபத்து வேறு வடிவில்
இப்போது வாகன ஓட்டிகளின் கவனத்தைத் திசை திருப்பும் போஸ்டர் கலாசாரம், அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. திரும்பும் இடமெங்கும் போஸ்டர், அரசு சுவர் போதாதென்று, தனியார் கட்டடங்கள், மொட்டை மாடிகள் என எதுவும் தப்பவில்லை.வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி, விபத்துக்கு வழிவகுக்கின்றன. அனுமதியின்றி பாலங்கள், அரசு சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்கள் அவற்றைச் சீரழிக்கின்றன. இதுவும் நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்தான்.
முதல்வர் நினைத்தால் முடியும்!
எதிர்க்கட்சியாக இருந்தபோது, பேனர் கலாசாரத்தை கடுமையாக எதிர்த்த ஸ்டாலின், தற்போது மாநிலத்தின் உச்சபட்ச அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கிறார். அவர் நினைத்தால், பேனர் கலாசாரத்துக்கும் முடிவு கட்டிவிட முடியும்.பேனர், போஸ்டர் ஒட்டினால், கட்சி பாகுபாடின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் உருவானால் தவிர, இதற்கு வேறு வழியே இல்லை. அது ஆட்சியாளர்கள், அதிகாரிகளின் கையில் இருக்கிறது. அவர்களின் கடமையை அவர்கள் செய்தே ஆக வேண்டும். அதுவரை நாம் நினைவூட்டிக் கொண்டே இருப்போம்.நிற்க. ரகுவைக் கொன்றது யார் என்ற கேள்விக்கு உங்களுக்கு விடை கிடைத்ததா? நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள், கட்சித் தலைமையை திருப்திப்படுத்த அலங்கார வளைவுகளையும், பேனர்களையும் அமைத்த நிர்வாகிகள், விதிமீறல் எனத் தெரிந்தும் கண்டிக்காத அரசுத் துறை, எதிர்த்துக் குரல் கொடுக்காத நாம் என எல்லோருமாகச் சேர்ந்துதான் ரகுவைக் கொன்று விட்டோம்.முதல்வரே...இனியும் வேண்டாமே இன்னொரு கொலை!