திண்டுக்கல்-- -திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை காற்றில் பறக்க விடும் வகையில் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை 2019 ம் ஆண்டு சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. கடந்தாண்டு ஜனவரிக்கு முன்பே இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. அமலுக்கு வந்த சில மாதங்கள் அதிகாரிகள் கண்ணும், கருத்துமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விற்போரிடம் பறிமுதல், பயன்படுத்துவோருக்கு அபராதம் என செயல்பாடுகள் தீவிரமாக இருந்தன.பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலானது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது எங்கு திரும்பினாலும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதிகாரிகளும், பொதுமக்களும் அரசு உத்தரவை கனவாக கருதி காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
குப்பை கூளங்கள், குடியிருப்பு பகுதி குப்பை தொட்டிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பி வழிவதை காண முடிகிறது.கிராமப் பகுதிகளில் பெரும்பாலும் சாலையோரங்கள், நீர்நிலைகள், வயல்வெளிகளில் வீசிச் செல்கின்றனர். கொடைக்கானல், சிறுமலை, பழநி போன்ற நகரங்களில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால் வனஉயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர்நிலைகளில் குவியும் பாலிதீன் கழிவுகள் தொடர் மழையால் தேங்கும் நீரை பூமிக்குள் செலுத்த தடையாக உள்ளன. அதிகாரிகள் இதன் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.