நத்தம்,--நத்தம் அருகே செங்குளத்தில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு 5 கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.நத்தம் அருகே செங்குளத்தில் முத்தாலம்மன், முப்புலிகருப்பு, பகவதி, வெள்ளரி, காளியம்மன் என 5 கோயில்களிலும் அடுத்தடுத்து கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி முதல் நாள் யாகசாலை பூஜைகள் நடந்தன. மறுநாள் லெட்சுமி பூஜை, கோ பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை போன்ற புனித தலங்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டன. புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பிறகு யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. அதேநேரம் வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. நத்தம் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் உட்பட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பூஜை மலர்கள், புனித தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டன.