கன்னிவாடி--கன்னிவாடியில் அதிகளவில் விபத்து ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை - -பழநி மெயின் ரோட்டில் உள்ள கன்னிவாடி வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பிற நகரங்களுக்கு செல்ல கன்னிவாடிக்கு வர வேண்டும். இங்கு பயணிகள் காத்திருப்பதற்கென போதிய இட வசதி இல்லை. பஸ் ஸ்டாப் நிழற்கூடங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன.இதனால் பயணிகள் திறந்தவெளியில் காத்திருக்கின்றனர். மெயின் ரோடு மற்றும் ரெட்டியார்சத்திரம் ரோட்டின் இருபுறமும் தனியார் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. கூடுதலாக விளம்பர பதாகைகள் அமைத்துள்ளனர். சரக்கு வாகனங்களை ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்துகள் தொடர்கதையாகி விட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி ரோட்டை விரிவுபடுத்த நெடுஞ்சாலை துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.