திண்டுக்கல்-திண்டுக்கல் மாவட்டத்தில் 2228 பேர் மீது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமீப காலங்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்துஉள்ளன. குறிப்பாக முன்விரோத கொலைகள் அதிகரித்துள்ளது. போலீசார் குற்ற சம்பவங்கள் நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை கைது செய்து விடுகின்றனர். இருப்பினும் குற்றம் நடக்காமல் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி 2 ஆயிரத்து 228 பேர் மீது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதில் 1363 பேரை ஆர்.டி.ஓ., முன்னிலையில் ஆஜர்படுத்தி ஒன்றரை மாதத்திற்கு நன்னடத்தை பிணையப்பத்திரம் பெறப்பட்டுள்ளது. இதில் பிணையத்தை மீறிய 14 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.அதேபோல் ரவுடிகள் மற்றும் திருட்டு குற்றவாளிகளை கண்காணிக்க மாவட்டம் முழுவதும், 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர இவ்வாண்டில் மட்டும் கொலை, திருட்டு, போக்சோ, கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற குற்றங்களில் ஈடுபட்ட 113 பேரை குண்டாஸில் சிறையில் அடைக்க போலீசார் பரிந்துரைத்துள்ளனர். எஸ்.பி., ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றபின் 57 பேர் குண்டாஸில் சிறை சென்றுள்ளனர்.