புளியந்தோப்பு : மாமியாருடன் நட்பு வைத்திருந்தவரை வெட்டிய இளைஞர் உட்பட, இருவர் கைதாகினர்.சென்னை புளியந்தோப்பு, கே.எம்., கார்டன், 13வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 40; ஆட்டோ ஓட்டுனர்.
இவர், நேற்று காலை, 8:00 மணியளவில் வீட்டருகே நின்ற போது, சூளை, தட்டான்குளம் கோவிந்தன் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், 23; புரசைவாக்கம் குட்டி தெருவைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் சரத்சந்திரன், 20; ஆகியோர் சரமாரியாக வெட்டினர்.பலத்த காயமடைந்த மணிவண்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், பிரகாஷின் மாமியார் ஈஸ்வரியுடன், மணிவண்ணன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ், தன் நண்பருடன் சேர்ந்து அவரை வெட்டியது தெரிந்தது. மேற்கண்ட இருவரையும், போலீசார் கைது செய்தனர்.