மாதவரம் : மழை, வெள்ள பாதிப்பால், வீடுகளில் சேதமடைந்த இயற்கை சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் வகையில், தோட்டக்கலைத் துறை கிடங்குகளில், பூ மற்றும் வீட்டு அலங்கார அழகு செடிகள் விற்பனைக்காக, இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்ட பகுதிகளில், நீடித்த பலத்த மழை வெள்ளத்தால், வீடுகளில் வளர்ந்திருந்த மரம், செடி, கொடி உள்ளிட்ட தாவரங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில், வீடுகளின் சுற்றுச்சூழலில், பசுமையை மீட்டெடுக்கும் வகையில், புதிய செடிகளை வளர்க்கும் ஆர்வத்தை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினர் ஊக்குவிக்கின்றனர்.அதற்காக, அத்துறையின் கிடங்குகள் வாயிலாக, தரமான பூச்செடிகள் மற்றும் வீடுகளின் உட்புறங்களில் வளர்க்கப்படும் அழகு செடிகளை விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, பன்னீர் ரோஜா, ஹைபிரீட் செம்பருத்தி, ஆந்திர ரோஜா மற்றும் வீட்டின் உட்புறத்தில் வளர்க்கப்படும், 'அரிக்கா' என்ற அலங்கார அழகு செடி, மாதுளை உள்ளிட்ட பல்வேறு செடிகள், தேவையான அளவுக்கு இறக்குமதி செய்துள்ளனர். அவை மாதவரம் பால்பண்ணை அருகே உள்ள, தோட்டக்கலைத் துறை பூங்கா, அண்ணாநகர், திருவான்மியூர், பெரம்பூர் மற்றும் கே.கே.நகர் செம்மொழி பூங்கா கிடங்குகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் தங்கள் வீட்டு தோட்டங்களில், மலர் செடிகளை நடவு செய்து பசுமை சூழலை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.