திருத்தணி : ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய, 220 இருசக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் வசூலித்தும், வாகன ஓட்டிகளை எச்சரித்தும் அனுப்பினர்.திருத்தணி நகரத்தில், இரு மாதங்களாக, இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் மர்ம நபர்களால் திருடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருத்தணி ஏ.எஸ்.பி., சாய்பரனீத் மேற்பார்வையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், சட்டம் - ஒழுங்கு எஸ்.ஐ., கிருஷ்ணமராஜு மற்றும் போலீசார், திருத்தணி பைபாஸ் கூட்டுச்சாலையில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த, 220 வாகனங்களை கண்டுபிடித்து அபராதம் வசூலித்தனர்.இது குறித்து திருத்தணி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் கூறியதாவது:நேற்று, இருசக்கர வாகனங்களை மடக்கி ஆவணங்கள் சோதனை செய்தோம்.வாகனங்களின் நெம்பர் பிளேட்டில், அரசு உத்தரவுப்படி எழுதாத நெம்பர் பிளேட் மற்றும் நெம்பர் பிளேட்டில் அரசியல்வாதிகள் படம் மற்றும் பிற புகைப்படங்கள் இருப்பின், அந்த வாகன ஓட்டிகளை எச்சரித்து, உடனடியாக அந்த நெம்பர் பிளேட்டை அகற்றினோம்.மேலும், வாகன ஓட்டிகள் கட்டாயம் சாலை விதிகளை மதிக்க வேண்டும் என, அறிவுறுத்தினோம்.இவ்வாறு அவர் கூறினார்.