காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் நாளை நடைபெறும் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டத்தில், பாரத பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தில் விவசாயிகள் இணையம் வழியாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியின் செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்தில், நவம்பர் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு நடக்கிறது.விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் தொடர்பான கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.இதே கூட்டத்தில், பாரத பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணையவழி விவசாயிகள் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் தேவைப்படும் விவசாயிகள், ஆதார் அட்டை, சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு ஆகிய நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்று, இணைய வழி சிறு, குறு விவசாய சான்றுக்கான ஆவணங்களை சமர்ப்பித்து, பதிவு செய்யலாம்.கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முகக்கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.