ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக, தி.மு.க., சார்பில் கடந்த, 22 முதல் வரும், 26 வரை விருப்ப மனுத்தாக்கல் நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி - 60 வார்டு, கோபி நகராட்சி - 30 வார்டு, பவானி நகராட்சி - 27 வார்டு, சத்தியமங்கலம் நகராட்சி - 27 வார்டு, புஞ்சை புளியம்பட்டி நகராட்சி - 18 வார்டு, 42 பேரூராட்சிகளில், 630 வார்டுகள் உள்ளன. ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தில், தலைமை பேச்சாளர் இளையகோபால் தலைமையிலும், வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையிலும் மனுக்கள் பெறப்படுகின்றன. ஈரோடு தெற்கு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, 60 கவுன்சிலர் பதவிக்கு, 125 பேரும், 23 பேரூராட்சிகளில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு, 60 பேரும் மனுத்தாக்கல் செய்தனர். வடக்கு மாவட்டத்தில், நான்கு நகராட்சி வார்டுகளுக்கு, 70 பேரும், 19 பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு, 80 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.