தர்மபுரி: 'ஜெய்பீம் பட குழுவினருக்கு ஆதரவாக இருப்போம்' என, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் நஞ்சப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யாவுக்கும் இயக்குனர் ஞானவேலுக்கும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் சார்பில், பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு தேவையான அனைத்து வகையான ஒத்துழைப்பையும் வழங்கி, அவருக்கு துணை நிற்போம். கதையை, உணர்வு பூர்வமாக உணர்ந்து படத்தயாரிப்பாளரும், இயக்குனரும் முறைப்படுத்தி உள்ளனர். புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும், தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் காடு மற்றும் மலைப்பகுதியில் இருளர் இன மக்கள் வாழ்கின்றனர். வனங்கள் அழிக்கப்பட்ட பகுதிகளில், சிதறுண்டு வாழும் இம்மக்களின் வாழ்க்கை துயரம் நிறைந்ததாகும். எவ்வித பாதுகாப்பற்ற, கேட்பாரற்ற மக்களாக இவர்கள் வாழ்கிறார்கள். எனவே, எதிர்ப்புகளை கண்டு தயங்காமல், தொடர்ந்து இத்தகைய படைப்புகளை அளித்து, பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் தங்களது பங்கை அளிக்க வாழ்த்துக்கள். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.