மேட்டூர்: மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு குறைந்ததால், காவிரி கதவணைகளில் மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. மேட்டூர் முதல், கரூர் வரை காவிரி குறுக்கே, செக்கானூர், நெருஞ்சிபேட்டை, அக்ரஹாரம் உள்ளிட்ட, 7 இடங்களில் கதவணை மின் நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு மின்நிலையத்திலும் தலா, 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். கடந்த, 13ல் மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது. உபரி நீர்திறப்பு வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது. வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடிக்கு மேல் காவிரியில் நீர் வெளியேறினால் நீரின் அழுத்தம் காரணமாக கதவணை மின் நிலைய இயந்திரங்கள் பாதிக்கும். அதை தடுக்க கடந்த, 14 முதல் கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மேட்டூர் அணை உபரி நீர் திறப்பு வினாடிக்கு, 30 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. இதனால், நேற்று முன்தினம் முதல் கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கியது. முதல்கட்டமாக ஒரு கதவணையில் தலா, 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. நீர்திறப்பு சரிவுக்கு ஏற்ப மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.