சேலம்: சேலம் மாவட்ட ஊரக புத்தாக்க திட்டத்தில் பணிபுரிய, இரு பணியிடங்களுக்கு நேற்று நடந்த நேர்காணலில், 104 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு புத்தாக்க திட்டத்தில் ஓமலூர், தாரமங்கலம் மேச்சேரி, வீரபாண்டி, ஆத்தூர் மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஓரிட சேவை மையத்தில் பணிபுரிய தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் இந்த பதவிக்கு முதுகலை பட்ட மேற்படிப்பு படித்த இளைஞர்கள் மற்றும் சமூக சேவையில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கடந்த மாதம் அறிவித்திருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் பெறப்பட்டன. விண்ணப்பித்தவர்களுகக்கான நேர்காணல் நேற்று நடந்தது. சேலம் மாவட்ட நாட்டான்மை கழக கட்டட வளாகத்தில் நடைபெற்ற நேர்காணலில், 104 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரும் அமர வைக்கப்பட்டு தனித்தனியே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் அவர்களின் செயல்திறன் கூடுதல் தகுதி போன்றவை குறித்து அலுவலர்கள் நேர்காணல் நடத்தினார். ஒப்பந்த அடிப்படையிலான இப்பணிக்கு, தகுதியுள்ளோருக்கு பணி ஆணை வழங்கப்படும் என தெரிவித்தனர்.