வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன் இல்லாததால், நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர்.வால்பாறையில் உள்ள எஸ்டேட் தொழிலாளர்கள், அரசு மருத்துவமனையை மட்டுமே சிகிச்சைக்கு நம்பியுள்ளனர்.ஆனால், அரசு மருத்துவமனையில் பல்வேறு காரணங்களால் நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. குறிப்பாக, ரத்த வங்கி இல்லாததால், விபத்து சம்பவங்களில் காயமடைந்து சிகிச்சைக்கு வருவோர், பொள்ளாச்சி, கோவை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர்.மேலும், மருத்துவமனையில் டாக்டர், செவிலியர், உதவியாளர், சமையலர் உள்ளிட்ட பெரும்பலான பணியிடங்கள் காலியாக இருப்பதால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.குறிப்பாக, விபத்து காலங்களில் எக்ஸ்ரே எடுக்க மருத்துவமனையில், டெக்னீசியன் இல்லாததால் நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால், 64 கி.மீ., தொலைவில் உள்ள, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு, நோயாளிகள் எக்ஸ்ரே எடுக்க செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டபோது, 'கடந்த மூன்று மாதங்களாக எக்ஸ்ரே எடுக்க டெக்னீசியன் இல்லை. விரைவில் டெக்னீசியன் நியமிக்கப்படுவார். ரத்த வங்கி அமைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. பணியாளர் பற்றாக்குறைக்கும் விரைவில் தீர்வு காணப்படும்,' என்றனர்.