சென்னையின் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழை நீரால், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில், கடந்த மாதத்தை ஒப்பிடுகையில், நவ., மாதத்தில் நேற்று வரை, மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. நடவடிக்கைஅதாவது, கடந்த மாதம், 219 பேர் டெங்கு காய்ச்சலுக்கு ஆளான நிலையில், சென்னையில் நேற்று வரை, 16 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல் குறைந்ததற்கு, தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டதே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், சென்னையில் தற்போது விட்டு விட்டு கனமழை பெய்வதால், ஆங்காங்கே மழை நீர் தேங்குவது அதிகரித்து உள்ளது. குடியிருப்புகளை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரில், டெங்கு பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மாநகராட்சி அறிவுறுத்திஉள்ளது. அடுத்து வரும் நாட்களில், கண்காணிப்பை தீவிரப்படுத்தாவிட்டால், பாதிப்பு அதிகரிக்கும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.எனவே, மாநகராட்சி களப்பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளனர். அது தவிர, பல இடங்களில் குடிநீரின் தரம் பரிசோதிக்கப்படுகிறது. குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.அதே போல், சிறிய அளவில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும், பொதுமக்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாம்களில் சென்று சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர் நடவடிக்கைகளின் மூலம், சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை மாநகர சுகாதார நல அலுவலர் ஜெகதீசன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், இந்த மாதத்தில் இதுவரை, 16 பேர் மட்டுமே, டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் மற்றும் அதன் லாவாக்கள், தற்போது பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால் அழிந்து போயிருக்க கூடும். அதன் பயனாக, 'ஏடிஸ்' கொசுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம், மழை நீர் தேங்கிய பகுதிகள், வீடுகளில், ஏடிஸ் கொசுக்களின் லாவாக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கிய இடங்களில், கொசு மருந்து தெளிப்பு மற்றும் புகை போடப்படுகிறது. தண்ணீர் தேங்கிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
இவற்றை, தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்தப்பின் போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களும் தங்கள் வீடு, மொட்டை மாடிகளில், தேவையற்ற நிலையில் உள்ள பொருட்களை அகற்ற வேண்டும். மேலும், குளிர்சாதன பெட்டி பின்புறம், சிறிய தொட்டியில் தேங்கக்கூடிய நீரை, அடிக்கடி அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல், வீட்டு அருகாமையில், தேவையற்ற பொருட்கள் இருந்தாலும் அகற்றி, ஏடிஸ் கொசு வளராமல், மாநகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
சென்னையில் தற்போது வரை டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மழைக்கால மருத்துவ முகாம்கள் வாயிலாக, மக்களின் அனைத்து உடல்நிலை பாதிப்புகளையும் கேட்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், டெங்கு அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -