வால்பாறை: வால்பாறையில், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில், அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் பணிமனையுடன் கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ளது.வால்பாறை நகரை விட்டு ஒதுக்குப்புறமாக பஸ் ஸ்டாண்ட் இருப்பதால், பயணிகள், பள்ளி மாணவர்கள் வசதிக்காக, காந்தி சிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டது.தற்போது, காந்திசிலை வளாகத்திலிருந்து அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, காந்திசிலை வரை, ரோட்டின் இருபக்கமும் வாகனங்களும், ஆக்கிரமிப்பு கடைகளும் அதிக அளவில் உள்ளன. இதனால் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, காந்திசிலை வரை மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.குறிப்பாக, பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள், ரோட்டில் செல்ல முடிவதில்லை. சுற்றுலா பயணிகள் வாகனங்களும் அதிக அளவில் ரோட்டில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சாலையோர ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதோடு, போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களையும் அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.