சூலுார்: கணியூர் டோல்கேட் அருகே சர்வீஸ் ரோடுகளில் லாரிகள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.செங்கப்பள்ளி முதல் வாளையாறு வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு, 10 ஆண்டுகளுக்கு முன் ஆறுவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த ரோட்டில் இருபுறமும் சர்வீஸ் ரோடுகள் உள்ளன.இதில் உள்ளூர் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. அவிநாசி ரோட்டை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு இந்த சர்வீஸ் ரோடுகள் வழியாகத்தான் செல்ல முடியும்.கணியூர் டோல்கேட் அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில், இருபுறங்களிலும் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கன்டெய்னர் உள்ளிட்ட லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால், சர்வீஸ் ரோட்டின் வழியாக கிராமங்களுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஆட்டோக்கள் மற்றும் டெம்போ ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.போராட்ட அறிவிப்புகணியூர் ஊராட்சி உறுப்பினர் சிவக்குமார் கூறியதாவது:கன ரக வாகனங்களை அதற்குரிய 'பார்க்கிங்' பகுதியில் மட்டும் நிறுத்த வேண்டும். மற்ற பகுதிகளில் நிறுத்தக்கூடாது. சர்வீஸ் ரோடுகளில் நிற்கும் வாகனங்களால், எதிரில் வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால், இரவு மட்டுமின்றி பகல் நேரத்திலும் விபத்துகள் ஏற்படுகின்றன.லாரிகள் நிறுத்த தடை விதிக்க வேண்டும் என, டோல்கேட் நிர்வாகம், கருமத்தம்பட்டி போலீசாரிடம் பலமுறை மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
வரும், டிச., 11ல் உள்ளூர் வாகன ஓட்டிகள், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்த முடிவுசெய்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.அபராதம் விதிக்கப்படும்கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை கூறுகையில், ''அவிநாசி ரோட்டை ஒட்டி இருபுறம் உள்ள சர்வீஸ் ரோடுகளில் கன ரக வாகனங்களை நிறுத்தக்கூடாது என, தொடர்ந்து ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ரோந்து செல்லும் போலீசார், லாரிகளை நிறுத்தக்கூடாது என, எச்சரிக்கை விடுக்கின்றனர். மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. லாரி புக்கிங் ஆபிஸ் உரிமையாளர்களிடமும் லாரிகளை நிறுத்த தனி இடம் ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம். டோல்கேட் அருகே வாகனங்களை நிறுத்தக்கூடாது. மீறி நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.இது தொடர்கதைசர்வீஸ் ரோட்டில், மேற்கு நோக்கி இரு சக்கர வாகனத்தில் செல்வோர், மெயின் ரோட்டின் நடுப்பகுதிக்கு சென்று, செல்ல வேண்டியுள்ளது. இதனால், டோல்கேட்டில் இருந்து வரும் வாகனங்கள் மோதி, விபத்துகள் ஏற்படுகின்றன.இரு ஆண்டுகளுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் வந்த பெண், வேன் மோதி இறந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன், சர்வீஸ் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது லாரி மோதியதில், எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், விபத்துகள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது.