அன்னுார்: அரசு துறைகளுக்கு இடையில் உரிய ஒருங்கிணைப்பு இன்மையால், பல லட்சம் ரூபாய் மதிப்பில் போடப்பட்ட தார் சாலை மூன்றே மாதங்களில் அகற்றப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுார் -- சத்தி ரோட்டிலிருந்து இட்டேரி பாதை, அவிநாசி ரோட்டில் நாகமாபுதூரில் சேர்கிறது. ஒரு கி.மீ., உள்ள இச்சாலை, மூன்று மாதங்களுக்கு முன், 25 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக போடப்பட்டது. அத்திக்கடவு திட்டத்தில் குழாய்கள் பதிக்க, இச்சாலை கடந்த வாரம் பாதி அளவு அகலத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது.உப்பு தோட்டம் மக்கள் கூறியதாவது :பல ஆண்டுகளாக இட்டேரி சாலை மிக மோசமாக, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் இருந்தது. பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் பலமுறை கோரிக்கை வைத்து, நிதி ஒதுக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன் 12 அடி அகலம், ஒரு கி.மீ.,க்கு புதிதாக, 25 லட்சம் ரூபாயில் சாலை அமைக்கப்பட்டது. கடந்த வாரம் அத்திக்கடவு திட்டத்தில் குளத்தில் நீர் நிரப்ப, சாலையின் பாதியளவு, ஆறு அடி அகலத்துக்கு தார் சாலையை பெயர்த்து நான்கு அடி ஆழத்துக்கு குழி தோண்டினர். பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி இடையே சரியான ஒருங்கிணைப்பு இருந்திருந்தால் அத்திக்கடவு குழாய் பதிக்கப்பட்ட பின், இந்த சாலையை அமைத்து இருக்கலாம்.தற்போது போடப்பட்ட புதிய சாலையில் பாதி சாலை முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை போட்டும் பயனில்லாமல் போய் விட்டது.தற்போது குழிதோண்டி குழாய் பதித்த இடங்களில் சேறும் சகதியுமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் குழி தோண்டிய போது சில வீடுகளில் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது, அதிகாரிகள் விரைவில் மீண்டும் ஒருங்கிணைந்து ஆலோசித்து தார் சாலை அமைக்க வேண்டும்.இவ்வாறு மக்கள் தெரிவித்தனர்.