பெ.நா.பாளையம்: கோவை வடக்கு, சின்னதடாகம் வட்டாரத்தில், நிலத்தடி நீர் பெருக நீர் வழி பாதைகளை சீரமைப்பதுதான் ஒரே வழி என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னதடாகம் வட்டாரத்தில், செங்கல் தயாரிக்க சுரங்கங்கள் பெருமளவு தோண்டப்பட்டு உள்ளன. பல இடங்களில் நீர்வழிப்பாதைகள் காணாமல் போய்விட்டன. வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்தும், தடுப்பணைகளில் நீர்வரத்து போதிய அளவு இல்லை.கோவை வடக்கு தாலுகாவில் கடந்த, 45 ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக, பாசனக் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், 600 முதல், 700 அடியாக மாறிவிட்டன.கடந்த இரண்டு மாதங்களாக நல்ல மழை பொழிவு இருந்ததால், கோவை மாநகரை சுற்றியுள்ள பெருவாரியான ஏரி, குளங்கள் நிறைந்துவிட்டன. ஆனால், கோவை வடக்கு தாலுகாவில் மட்டும் நிலைமை தலைகீழாக உள்ளது.வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, அக்ரஹார சாமகுளம், கொண்டையம்பாளையம், கோவில்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகியவற்றின் வழியாக ஓடும் கவுசிகா நதியில், ஏழு பெரிய தடுப்பணைகள் உள்ளன. அவற்றில் மழைநீர் நிறையவில்லை.விவசாயிகள் கூறுகையில், 'கோவை வடக்கில் நதி அமைப்புக்கு தண்ணீரை கொண்டு சேர்க்கும் ஓடைகள், 200க்கும் மேல் உள்ளன. அதில், 40 ஓடைகள் மறிக்கப்பட்டுள்ளன. மாவட்ட வளர்ச்சி திட்ட முகமை நிதியில் அரசு அமைத்த தடுப்பணைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நீர்வழிப் பாதைகள் மண் சுமக்கும் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன.'சின்னதடாகம் முதல் மாங்கரை சோதனை சாவடி வரையில் பள்ளம், 10 கி.மீ., நீளமுள்ளது. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான டிப்பர் லோடு மண், செங்கல் தயாரிக்க எடுத்துவிட்டதால், மலையில் இருந்து வடியும் தண்ணீர் வழியில்லாமல் பள்ளங்களிலேயே தங்கி விடுகின்றன. நிலத்தடி நீர் பெருக நீர் வழி பாதைகளை சீரமைப்பதுதான் ஒரே வழி' என்றனர்.காப்பு காடாக அறிவிக்கணும்!தமிழக விவசாயிகள் சங்கம், கோவை மாவட்ட தலைவர் தண்டபாணி கூறுகையில்,''கோவை வடக்கு பகுதியில் மழை தருணத்தில், அதிகாரிகள் குழு நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். நீர் வழி பாதைகளை சீரமைத்து, கோவை வடக்கில் ஏரிகள், தடுப்பணைகள், குட்டைகள் ஆகியவற்றில் மழைநீர் பெருக ஆவன செய்ய வேண்டும். அப்போதுதான், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பழைய நிலைமைக்கு திரும்பும். பாதிக்கப்பட்ட சுரங்கம் மற்றும் பள்ளவாரி பகுதியை காப்பாற்ற, அவற்றை 'காப்பு காடுகளாக' அறிவிக்க வேண்டும்,'' என்றார்.