சூலுார்: கள்ளப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட, 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கள்ளப்பாளையத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சாலை மறியல் நடந்தது. அதில், சூலுார் எம்.எல்.ஏ.,கந்தசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்லடம் - செட்டிபாளையம் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். 2மணி நேரத்துக்குப்பின் மறியல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, மறியல் செய்த எம்.எல்.ஏ., உள்ளிட்ட, 25 பேர் மீது சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்நிலையில், தன்மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக, டாஸ்மாக் சூப்பர்வைசர் மீது, இப்போராட்டத்தில் பங்கேற்ற கள்ளப்பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் ரங்கநாதன், சூலுார் போலீசாரிடம் புகார் அளித்தார்.இதுகுறித்து சூலுார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.