அவிநாசி: அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், தீயணைப்பு நிலைய கட்டட கட்டுமானப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது; அடுத்தாண்டு, பொங்கல் பண்டிகை சமயத்தில், கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.தாலுகா அந்தஸ்து பெற்ற அவிநாசியில், தீயணைப்பு நிலையத்துக்கென சொந்த கட்டடம் இல்லாத சூழல் காணப்பட்டது. மங்கலம் சாலையில், இடவசதி குறைந்த வாடகை கட்டடத்தில், தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், காலியாக உள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலத்தில், 50 சென்ட் நிலம், தீயணைப்பு நிலைய கட்டடம் அமைக்க ஒதுக்கப்பட்டு, கட்டுமானப்பணி நடந்து வருகிறது.கட்டுமானப்பணியை அடுத்த மாதம் நிறைவு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்ட நிலையில், தொடர் மழையால், பணியில் தொய்வு தென்பட்டுள்ளது.இதனால், அடுத்தாண்டு ஜன., மாதம், பொங்கலுக்குள் கட்டுமானப் பணியை முடித்து திறப்பு விழா நடத்த தீயணைப்பு துறையினர் திட்டமிட்டு வருகின்றனர்.குடியிருப்பு எப்போது?அவிநாசி, தீயணைப்பு நிலையத்தில், 17 தீயணைப்பு வீரர்கள் பணிபுரிய வேண்டிய நிலையில், 5 இடங்கள் காலியாக உள்ளன. அவை, விரைவில் நிரப்பப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லாததால், அவர்கள் நகரை விட்டு சற்று தொலைவில் வசிக்கின்றனர்.அவிநாசி - கோவை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்து உள்ளிட்ட சம்பவங்களின் போது, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு செல்வதற்கு, சற்று தாமதம் ஏற்படுகிறது.எனவே, நகரின் மத்தியில், தீயணைப்பு துறையினருக்கான குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.