திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தரைத்தள கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை தோறும், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடக்கிறது.தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள், அட்டை பெற வசதியாக, அரசு டாக்டர்கள் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் முகாமிட்டு, எளியவகையில் பரிந்துரைக்கின்றனர்.நேற்று, வழக்கம் போல் முகாம் நடக்குமென, மாற்றுத்திறனாளிகள் வந்திருந்தனர். முன்னறிவிப்பின்றி, இடம் மாற்றப்பட்டதால், முகாம் ரத்தாகிவிட்டதாக நினைத்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.மாற்றுத்திறனாளிகள் சிலர் கூறுகையில், 'மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சிறப்பு முகாமிற்கு வந்து தேசிய அட்டை பெறுகின்றனர். திடீரென இடத்தை மாற்றியதால், குழம்பி விட்டனர்.வழக்கம் போல் தரைத்தளத்திலேயே சிறப்பு முகாம் நடத்த வேண்டும். அப்போதுதான், சமூக இடைவெளியுடன் சென்று, பாதுகாப்பாக திரும்பி செல்ல முடியும்,' என்றனர்.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேஷிடம் கேட்டபோது, ''கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்பு இருப்பதால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அறையிலேயே, முகாம் நடத்தப்பட்டது.'' என்றார்.