ஓவியக்கலைக்கும் மக்கள் ரசனைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் வகையில், கோவையில் பிரமாண்டமான சுவரோவியங்கள் வரையப்படுகின்றன.நகரில் உள்ள வானுயர்ந்த கட்டட முகப்புகளை எல்லாம், வண்ண ஓவியங்களால் நிரப்பும் முயற்சியில் ஓவியர்கள் களம் இறங்கி உள்ளனர். கோவை மாநகராட்சி, ஏசியன் பெயின்ட் மற்றும் ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன் சார்பில், உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டட சுவர்களை ஓவியர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரித்து வருகின்றனர். ஓவியக்கலை மேல் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழல் சார்ந்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த பிரமாண்டமான சுவர் ஓவியங்கள் வரையப்படுவதாக ஓவியர்கள் கூறுகின்றனர்.இந்த ஓவியக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அக்மாலிடம் பேசிய போது... '' ஸ்டார்ட் இந்தியா பவுண்டேஷன் சார்பில், டில்லி, ஐதராபாத், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ள அரசு கட்டட சுவர்களில் பிரமாண்டமான ஓவியங்களை வரைந்து இருக்கிறோம். 2018ல் கோவையில் ஐந்து இடங்களில் பெரிய சுவர் ஓவியங்களை வரைந்தோம்.இப்போது ஒன்பது இடங்களில் வரைய திட்டமிட்டு இருக்கிறோம். ஓவியங்களை பொறுத்தவரை சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மட்டுமே, பார்த்து ரசிக்கும் ஒரு கலையாக இன்றைக்கு இருந்து வருகிறது.இந்த கலையை, அனைத்து மக்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த ஓவியக்குழுவில் மும்பை, ராஞ்சி, பெங்களூரு, கேரளா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த, ஐந்து ஓவியர்கள் உள்ளனர்,'' என்றார்.