பேரூர்: வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின், 100வது பிறந்தநாளையொட்டி, ஆவின் பாக்கெட்டுகளில் அவரது புகைப்படம் அச்சிடப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.இந்தியாவில், பால் உற்பத்தி மிகவும் குறைவாக இருந்தபோது, வெண்மை புரட்சிக்கு வித்திட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தியவர், வர்கீஸ் குரியன்.இதனால் இவர், வெண்மைப் புரட்சியின் தந்தையாக அழைக்கப்படுகிறார். நாடு முழுவதும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களை உருவாக்கிய பெருமைக்கும் உரியவர். இதனால், வர்கீஸ் குரியனின் பிறந்த நாளான, நவ., 26ம் தேதி, தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது.வர்கீஸ் குரியனின், 100வது பிறந்தநாளையொட்டி, ஆவின் பால் பாக்கெட்களில், வர்கீஸ் குரியனின் புகைப்படம் அச்சிடப்பட்டு, 'சேவையே வாழ்க்கை' என்ற வாசகமும் பொறிக்கப்பட்டு இருந்தது.இதுகுறித்து, கோவை மாவட்ட ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் கூறுகையில், "வெண்மை புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியனின் நூற்றாண்டு தினத்தில், அவருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் அவரது உருவம் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டது. கோவையில், 4 லட்சம் பால் பாக்கெட்டுகளில், வர்கீஸ் குரியனின் படம் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டது,'' என்றார்.