கோவை வனக்கோட்டத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்பு, கேரள வழித்தடத்தில் ரயில் மோதி மூன்று யானைகள் இறந்த பின்னும், வனத்துறை, ரயில்வே துறை இணைந்து யானைகளைக் காக்க உறுதியான நடவடிக்கை எடுக்காததால், தற்போது அதே வழித்தடத்தில் மீண்டும் ரயில் மோதி, மேலும் மூன்று யானைகள் பரிதாபமாக பலியாகியுள்ளன.
கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், யானை-மனித மோதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. யானைகளின் வழித்தடங்களில், குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள், ஆசிரமங்கள், மத்திய, மாநில அரசுகளின் கட்டடங்கள் என பலவிதமான தடுப்புகள் வந்து விட்டதால், யானைகள் தடம் மாறி, ஊர்களுக்குள் ஊடுருவுவதும், மனிதர்களைத் தாக்குவதும் அடிக்கடி நிகழ்கிறது.
காட்டு யானைகளிடமிருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து காட்டு யானைகளையும் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை தமிழக வனத்துறை எடுக்காமல், அன்றன்றைக்கு பிரச்னைகளை சமாளித்து வருகிறது.
இதேபோல, வனப்பகுதிகளுக்குள்ளும் யானைகளுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் வலுத்து வருகிறது. முக்கியமாக, வனப்பகுதிக்குள் உள்ள ரயில் பாதைகளை, காட்டுயானைகள் கடக்கும்போது, ரயில்களில் மோதி உயிரிழப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது, வன உயிரின ஆர்வலர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
ஏனெனில், கடந்த 2008ம் ஆண்டு, பிப்., 4ம் தேதியன்று அதிகாலை 1:30 மணிக்கு, இதே கோவை வனக்கோட்டப்பகுதியில் ரயில் மோதி மூன்று யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அப்போது நான்கு காட்டு யானைகள், பல மாதங்களாக குடியிருப்புப் பகுதிகளுக்குள் அவ்வப்போது வலம் வந்து கொண்டிருந்ததால், பொது மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி இருந்தனர்.
அதனால் அந்த யானைகளைத் துரத்துவதற்கு பலவிதமான முயற்சிகளை வனத்துறை எடுத்துக் கொண்டிருந்தது. அப்படி துரத்தப்பட்டதில் மூன்று யானைகள் தான், மதுக்கரை குரும்பபாளையம் அருகே ரயில் மோதி இறந்தன. ஈரோட்டில் சர்வீஸ் செய்யப்பட்டு, பயணிகள் இல்லாமல் எட்டு ரயில் பெட்டிகளுடன் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்த கோவை- - பாலக்காடு - -சொர்ணுார் பாசஞ்சர் ரயில் மோதி, 30 வயது நிறைந்த கர்ப்பிணி யானை, 20 மற்றும் 10 வயதுள்ள இரண்டு ஆண் யானைகள் அந்த விபத்தில் பலியாயின.
கர்ப்பிணி யானையின் வயிற்றில் இருந்த குட்டி யானையே வெளியில் விழுந்து உயிரிழந்த கொடுமையும் நிகழ்ந்தது. இவ்வளவு அகோரமான ஒரு விபத்தை பார்த்த பின்னும், அதற்குப் பின் அதே பகுதியில் பல யானைகள் ஒவ்வொன்றாக ரயிலில் அடிபட்டு இறந்தபோதும், கடந்த, 13 ஆண்டுகளில் இதை தடுப்பதற்கு, வனத்துறை, ரயில்வே துறை இரண்டுமே எந்த உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இதன் காரணமாக, நேற்றிரவு 10:05 மணிக்கு, மீண்டும் அதே பகுதியில் கேரள வழித்தடத்திலிருந்து வந்த ரயில் மோதி, மேலும் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.இந்த வனப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை (30 கி.மீ., வேகம்) விட அதிக வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுவதே இதற்குக் காரணமென்பதே இப்போது எழுந்துள்ள குற்றச்சாட்டாக உள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-