புதுச்சேரி-மதுபான கடையை சூறையாடிய 'டாடி ஆறுமுகம்' மகன் கோபிநாத் உள்ளிட்ட 5 பேர் மீதான வழக்கில், மேலும் 2 பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டது.'வில்லேஜ் புட் பேக்டரி' என்ற 'யு டியூப் சேனல்' நடத்தி வருபவர் 'டாடி ஆறுமுகம்'. இவர் புதுச்சேரியில் 'டாடி ஆறுமுகம் பிரியாணி' என்ற உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் கோபிநாத், 33; உள்ளிட்ட 5 பேர் கடந்த 21ம் தேதி இரவு, முத்தியால்பேட்டை காந்தி வீதி, ஏ.கே.டார்வின் ஓட்டலுக்கு சென்று மது குடித்துள்ளனர்.இரவு 11:00 மணிக்கு பிறகு மதுபானம் தர முடியாது என கூறிய பார் ஊழியர் ஜார்ஜ்ஸ் சினாஸ், 32; என்பவரை அடித்து காயம் ஏற்படுத்தி, பாரை அடித்து நொறுக்கினர்.முத்தியால்பேட்டை போலீசார் கோபிநாத் உள்ளிட்ட 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, இருவரை கைது செய்தனர். தலைமறைவாக கோபிநாத் உள்ளிட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.இந்நிலையில், கோபிநாத் உள்ளிட்ட மூவரும், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனு மீதான விசாரணை வரும் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.சிறையில் உள்ள ஜெயராம், தாமு ஆகிய இருவர் ஜாமின் கேட்ட மனு, நேற்று மாஜிஸ்திரேட் (3) யுவராஜ் முன் விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார்தாரர் வாதத்தை கேட்க வேண்டும் எனவும், புகார்தாரர் தற்போது மருத்துவமனையில் உள்ளார்.அதனால் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், வரும் 29ம் தேதிக்கு ஜாமின் மனு விசாரணையை ஒத்தி வைத்தார்.இந்நிலையில், கோபிநாத் உள்ளிட்ட 5 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் ஐ.பி.சி. 149, கும்பலாக கூடி குற்ற செயலில் ஈடுபடுதல் ஐ.பி.சி. 143 ஆகிய பிரிவு கூடுதலாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.