2026ல் 'சிங்கப்பூராக' மாறுது 'சிங்கார சென்னை'! உலக வங்கி வழங்குகிறது ரூ.9,125 கோடி கடன் | சென்னை செய்திகள் | Dinamalar
2026ல் 'சிங்கப்பூராக' மாறுது 'சிங்கார சென்னை'! உலக வங்கி வழங்குகிறது ரூ.9,125 கோடி கடன்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

27 நவ
2021
05:52
பதிவு செய்த நாள்
நவ 27,2021 05:47

'சென்னை மாநகர் கூட்டாண்மை' என்ற சி.சி.பி., திட்டத்தின் கீழ், உலக வங்கி, தமிழக அரசுக்கு 9,125 கோடி ரூபாய் கடன் அளிக்க உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, சென்னை மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளை போல, சென்னை மாநகரின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 2020 - 21 ஆண்டு பட்ஜெட் அறிக்கையில், சென்னை மாநகரம் நிலைத்தக்க பொருளதார வளர்ச்சி பெறுவதை உறுதி செய்யும் வகையில், உலக வங்கியின் ஆதரவுடன், 'சென்னை மாநகர கூட்டாண்மை' என்ற தனித்துவமான வளர்ச்சி திட்டம் துவங்கப்படும் என, அறிவித்தது. இத்திட்டத்தில், பெருநகர போக்குவரத்து, நீர் ஆதாரங்களின் தாங்குதன்மை, நகர நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை போன்ற கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.
சென்னை மெட்ரோ ரயில், தெற்கு ரயில்வே, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலை துறைகளின் நகர்ப்புற போக்குவரத்து, உலக தரத்திற்கு மேம்படுத்தப்படும். குறிப்பாக, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்படும். அனைத்து துறைகள் மற்றும் போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைத்து, நிதி ஆதாரங்களை பகிர்ந்தளித்துவரும் அமைப்பாக, இது இருக்கும்.


நீர் ஆதாரங்கள்


நீர் ஆதாரங்களின் பிரிவில், வெள்ள பாதிப்பு மற்றும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்கும், ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். நகர்ப்புற நிர்வாகம் மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகிய பிரிவுகளை, சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் பங்குதாரர்களாக இணைந்து செயல்படும்.
சென்னை மாநகரின், சுகாதாரம், உணவு கட்டமைப்பு, வாகன போக்குவரத்து, தரமான குடிநீர், மழை நீர் வடிகால் கட்டமைப்பு, உலக தரத்திலான சாலைகள், திடக்கழிவு மேலாண்மை, கல்வி உள்ளிட்டவற்றை மேம்படுத்த, உலக வங்கியிடம் 9,125 கோடி ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி, சென்னையை உலக தரத்திலான மாநகராக உயர்த்துவதற்கு, சி.சி.பி., திட்டத்தின் கீழ், உலக வங்கி கடன் அளிக்கவுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், நான்காவது பொருளதார வளர்ச்சிஉடைய நகரமாக சென்னை உள்ளது. சென்னை மாநகர், 1,189 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு, 1.09 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். சென்னையின் வளர்ச்சியை மேம்படுத்த, மாநகராட்சி வருவாய் நிதியுடன் மத்திய - மாநில அரசும் நிதி வழங்கி வருகிறது.

உலக வங்கி, ஜெர்மன் வளர்ச்சி வங்கி, ஆசிய வங்கிகளிடம் கடன் பெற்று, மழை நீர் வடிகால் கட்டமைப்பு, உலக தரத்தில் சாலைகள், நடைபாதைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை, சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமம் உள்ளிட்ட துறைகள் மேற்கொண்டு வருகின்றன.


பல மடங்கு


இந்நிலையில், அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, 'சென்னை மாநகர் கூட்டாண்மை' திட்டமான சி.சி.பி., செயல்படுத்தப்படுகிறது. இதில், சென்னை மாநகரில், உலக தரத்தில் மேம்பாட்டு வசதிகள் செய்யப்படும். இந்த பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். வரும் 2026ம் ஆண்டுக்குள் மேம்பாட்டு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு நிதி மற்றும் மத்திய அரசு நிதி என, பல்வேறு துறைகளை சார்ந்த வருவாய் நிதியில் இருந்து, 30 சதவீத பணிகள் முடித்த பின், உலக வங்கி 9,125 கோடி ரூபாயை வழங்கும்.

இத்திட்டம் முழுமை பெற்றால், சென்னையில் வாகன போக்குவரத்தால் ஏற்படும் மாசு பெருமளவு குறையும். மேலும், மழைநீர் தேங்குவது, குடிநீர் தட்டுப்பாடு போன்றவைகளும் இருக்காது. அனைவருக்கும் தரமான கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும். மேம்பட்ட மாநகராக மாறும்போது, உலக முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் வாயிலாக, சென்னை மாநகரின் வருவாய் பலமடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X