சென்னை : கல்வி, சுகாதாரத்துறை மற்றும் விமான நிலையம் என, பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 60 பேரிடம், 4 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.
வளசரவாக்கம், வீரப்பா நகர், அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரபிரபு, 51. இவரது மனைவி சசிபிரியா, 43. இவர்கள் 2016ல் இருந்து அதே பகுதியில், 'மாஸ் மேன் பவர் கன்சல்டன்சி' என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.திருவாரூரைச் சேர்ந்த இரண்டு பேருக்கு, நெய்வேலி என்.எல்.சி.,யில் பொறியாளர் வேலை வாங்கித் தருவதாக, தலா 16 லட்சம் என, 32 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.சென்னை சோழிங்கநல்லுாரைச் சேர்ந்த ஏழு பேருக்கு, உயர் நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகள் வாங்கித் தருவதாக, 40 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.
அதேபோல, சென்னையைச் சேர்ந்த காந்தா என்பவரின் மகனுக்கு விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரியாக வேலை வாங்கித் தருவதாக, 20 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளனர்.இவர்களுடன், கல்வி, சுகாதாரம், அறநிலையத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக, 60 பேரிடம், 4 கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி மோசடி செய்துள்ளனர். இதற்கு, அமெரிக்காவில் படித்து வரும் மகள் அக் ஷதா உடந்தையாக இருந்துள்ளார்.இந்த மோசடி குறித்து, காந்தா, 42 என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, ரவிச்சந்திரபாபு மற்றும் சசிபிரியாவை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.இவர்களிடம் இருந்து, போலி பணி நியமன ஆணைகள், அரசு முத்திரையுடன் போலி சிபாரிசு கடிதங்கள், மடிக்கணினி, 10 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இவர்களின் மகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
போலீசாரிடம், ராமச்சந்திரபிரபு அளித்துள்ள வாக்குமூலம்:நான், எட்டாம் வகுப்பு படித்துள்ளேன். மனைவி பிளஸ் 2 படித்துள்ளார். எங்களுக்கு ராயப்பேட்டையில், சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் வாடகை பணத்தில் குடும்பம் நடத்தி வந்தோம்.ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து, 2016ல் இருந்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்தோம்.இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.