சென்னை : ''நாட்டில் பல்வேறு பண்பாடு, கலாசாரத்தின் அடிப்படையில், அனைத்து கல்வி நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமைந்துள்ளது,'' என, யு.ஜி.சி., வழக்கறிஞர் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு, சென்னை பல்கலையின் இந்திய வரலாற்று துறை சார்பில், 'கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் தரும் பாதுகாப்பு அம்சங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. துறை தலைவர் பேராசிரியர் சுந்தரம் தலைமை வகித்தார். சென்னை பல்கலையின் பல்வேறு துறை பேராசிரியர்கள், துறை தலைவர்கள், மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., வழக்கறிஞர் பி.ஆர்.கோபிநாதன் பங்கேற்று, உரை நிகழ்த்தினார். அவரிடம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சட்ட ரீதியான பல்வேறு சந்தேகங்களை கேட்டனர். அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள முக்கிய அம்சங்களை, கோபிநாதன் எடுத்துரைத்தார்.
அவர் பேசியதாவது:அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த போதே, அனைத்து தரப்பினருக்கும், இலவச, கட்டாய பள்ளி கல்வி மற்றும் உயர்கல்வியை வழங்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி அனைத்து மாநிலங்களிலும், ஏராளமான கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டு, இளம் தலைமுறையினருக்கு உயர்கல்வி வழங்கப்படுகிறது.இனம், மதம், மொழி மற்றும் பொருளாதார பாகுபாடு இல்லாமல், அனைவருக்கும் கல்வி கிடைக்க, அரசியலமைப்பு சட்டத்தில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மொழி மற்றும் மத சிறுபான்மையினர் தனியாக கல்வி நிறுவனங்கள் துவங்கவும், அதனை அவர்களே நேரடியாக நிர்வாகம் செய்வதற்கும் அரசியலமைப்பு சட்டத்தில் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.நாடு முழுதும் கல்வியின் தரம் மற்றும் விதிகள் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் தான், யு.ஜி.சி.,விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.