சென்னை : திரு.வி.க., நகர் மண்டலத்தில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, கடந்த, 7ம் தேதி முதல் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை துரிதமாக அகற்ற, அலுவலர்களுக்கு உத்தரவிட்டு வருகிறார்.சென்னை புளியந்தோப்பு பகுதியில், மழையால் சேதமடைந்த மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும், திரு.வி.க., நகர், 73வது வார்டு, ஸ்டீபன்சன் சாலையில் பால பணிகளையும் முதல்வர் நேற்று ஆய்வு செய்தார். அப்பணிகளை விரைவாக முடிக்கும் படி, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சிவ இளங்கோ சாலை, பெரவள்ளூர் போலீஸ் நிலையம் எதிரில் உள்ள பகுதிகள், அசோகா அவென்யூ பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை, மோட்டார் பம்ப் வழியே வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.பின், கொளத்துார், ஜி.கே.எம்., காலனியில் குளம் சீரமைப்பு பணி; கந்தசாமி சாலையில் மழை நீர் தேக்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். தேங்கியுள்ள நீரை விரைவாக வௌயேற்றும் படி, அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின் போது, அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் உடன்இருந்தனர்.