மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்தில், கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், காலி மனைகளில், சுகாதாரத் துறை சார்பில், 'மஸ்கிட்டோ லார்வா சைட் ஆயில்'பந்துக்கள் வீசப்பட்டு வருகின்றன.
சென்னையில், 2015ம் ஆண்டு வரலாறு காணாத கன மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பெருங்குடி மண்டலத்தில் உள்ள மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில், புதிதாக வீடு கட்டுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.சதுப்பு நிலம், உப்பு கலந்த நிலத்தடி நீர், பாதாள சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதியும் இல்லாததால், இப்பகுதிகளில் வீடு கட்ட, பெரும்பாலானோர் தயங்கி வருகின்றனர்.
இதனால், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான காலிமனைகள் காணப்படுகின்றன. அவற்றில், ஒவ்வொரு மழைக் காலத்திலும் மழை நீர் தேங்குகிறது. ஆங்காங்கே உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், காலி மனைகளில் சேகரமாகின்றன. இதனால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. மாநகராட்சி சுகாதாரத் துறையினர், கொசு மருந்து அடித்து, பூச்சிகளை கட்டுப்படுத்தினாலும், நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை.
இந்நிலையில், காலி மனைகளில், 'ஆயில்'பந்துக்களை வீசி, கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதி களில் காலி மனைகள் அதிகம் உள்ளன.அதில், கழிவு நீர் தேங்கிய புதர் பகுதிகளில், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகும்.
இதை கட்டுப்படுத்தும் வகையில், 'ஆயில்' பந்து தயாரிக்கப்படுகிறது.மண், மரத்துாள் கலந்து துணியால் தயாரிக்கப்படும் இந்த பந்துகள், 'மஸ்கிட்டோ லார்வா சைட்' ஆயிலில் ஊற வைக்கப்படுகிறது. பின், காலிமனைகளில் புதர் மண்டிய மறைவான பகுதிகளில் வீசப்படுகிறது. இந்த வகையில், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட காலி மனைகள் அடையாளம் காணப்பட்டு அங்கு ஆயில் பந்துகள் வீசப்பட்டுள்ளன.
அதே போல், மண்டலம் முழுதும் உள்ள கொசு உற்பத்தியாகும் காலிமனைகள் கண்டறிந்து, 'ஆயில்' பந்துக்கள் வீசப்பட்டு வருகின்றன. காலிமனைகளில் தேங்கியுள்ள மழை நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.அதற்கான செலவு, அந்தந்த நில உரிமையாளர் கட்டும் வரியுடன் சேர்த்தும் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
-- நமது நிருபர் --