அம்பத்துார் : 'இறை இடம் இவர்' என்ற, ஆன்மிக ஓவிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள், பொதுமக்கள் மட்டுமின்றி படைப்பாளிகளையும் ஈர்த்து வருகிறது.
சென்னை அம்பத்துார் தொழிற்பேட்டை, புறவழிச்சாலையில் உள்ள, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' என்ற தொழில்நுட்ப கல்வி மையம் உள்ளது.அந்த கல்வி மையம் மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், அங்கு, இறைநெறி ஓவியர் ஆ.மணிவேலுவின், 'இறை இவர் இடம்' என்ற, ஆன்மிக ஓவிய கண்காட்சி நடக்கிறது. அடுத்த மாதம், 14ம் தேதி வரை, தினமும் காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை நடக்கும், இந்த கண்காட்சியை அனைவரும் கண்டு ரசிக்கலாம்.
நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்கள் மற்றும் அவற்றின் கருவறையில், பல்வேறு அலங்காரங்களுடன் இருக்கும், வழிபாட்டு சிற்பங்களை, ஓவியர் மணிவேலுவின் கை வண்ணத்தில் ஓவியங்களாக இங்கு கண்டு ரசிக்கலாம். ஆன்மிக ஓவியங்களுடன், ஆன்மீகம் குறித்து படித்தறிவதற்கு வசதியாக, 'தினமலரின்' புத்தக ஸ்டாலும், இங்கு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம், இந்த கண்காட்சியை, எழுத்தாளர் சுந்தரபுத்தன் கண்டு ரசித்தார்.
இந்த ஓவியக்கண்காட்சி குறித்து, சுந்தரபுத்தன் பேசியதாவது: இந்த ஓவிய கண்காட்சி அமைந்துள்ள, 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' என்ற இடத்தில் அமைந்துள்ளது மிகவும் பொருத்தமானது. சர்வதேச அளவில் இந்த ஸ்கூல் உள்ளது. இது மாணவர்களுக்கு, மிகப்பெரிய கல்வி வாய்ப்பை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. நமது முன்னோர்கள் சிறிய மரப்பாச்சி பொம்மையை கூட கலைநயத்துடன் வடிவமைத்தனர். இன்று குண்டூசி முதல், கோபுரம் வரை வடிவமைக்க, டிசைன் அவசியம்.
மேலும், இன்றைய நவீன தொழில்நுட்பம், ஓவியத்தை கல்வியாக மாற்றி உள்ளது. அதனால் தான், சென்னை, கும்பகோணம், குஜராத் உள்ளிட்ட இடங்களில் ஓவியக் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இது போன்ற கல்லுாரிகள், மாணவர்களின் எதிர்காலத்திற்கு, பெரிய வாய்ப் பை உருவாக்கி தரும். அந்த வகையில், இந்த டாட் ஸ்கூல் ஆப் டிசைனில் அமைந்துள்ள ஓவிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ள, ஓவியர் மணிவேலுவின் ஓவியங்கள், மிகவும் நேர்த்தியானவை. அவரது படைப்புத்திறன் வியக்க வைக்கிறது. இதை, அனைவரும் கண்டு ரசிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.