சென்னை : கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற, பொறியியல் பட்டதாரியை காப்பாற்றிய, உயிர் காப்பு பிரிவு காவலர்களை பாராட்டி, கமிஷனர் சான்றிதழ் வழங்கினார்.
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை பின்புறம் என, இரு இடங்களில், உயிர் காப்பு பிரிவு செயல்படுகிறது.இவற்றில் இம்மாதம் 24ம் தேதி, சென்னை ஆயுதப்படை காவலர் அருண், சிறப்பு காவல் படையைச் சேர்ந்த காவலர் மைக்கேல் திலீபன் ஆகியோர் பணியில் இருந்தனர்.மதியம், 12:00 மணியளவில், வாலிபர் ஒருவர் கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை, இரு காவலர்களும் காப்பாற்றி விசாரித்தனர்.அப்போது அவர், சென்னை முகப்பேர் வி.ஜி.என்., நகரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி யோகேஷ், 27, என தெரிந்தது.வாலிபரின் உயிரை காப்பாற்றிய அருண் மற்றும் மைக்கேல் திலீபன் ஆகியோரை தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டி, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்தார்.இதேபோல, அண்ணா நகர் பாடிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம், 38. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்துகிறார்.இம்மாதம் 23ம் தேதி இரவு 11:00 மணியளவில், கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.அப்போது, அவரது வீட்டிலிருந்து ஓடிய நபரை துரத்திப் பிடித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில், மாங்காடு அம்மாள் நகரைச் சேர்ந்த மொபைல் போன் திருடன் லட்சுமணன், 24, என தெரிந்தது.துணிச்சலுடன் செயல்பட்ட முத்துராமலிங்கத்தையும் கமிஷனர் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.