சென்னை : சென்னை, கொளத்துாரில் துவக்கப்பட்ட கபாலீஸ்வரர் கல்லுாரியில், உதவி பேராசிரியர் பணிக்கு நேரடி நேர்முகத் தேர்வு நடத்தியதை எதிர்த்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அறநிலையத்துறை சார்பில், சென்னை கொளத்துாரில், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்கப்பட்டு உள்ளது. இக்கல்லுாரியில், உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான நேரடி நேர்முகத் தேர்வு குறித்து, 2021 அக்., 13ல் விளம்பரம் வெளியிடப்பட்டது. அக்., 18ல் நேர்முக தேர்வு நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள் பங்கேற்கலாம் என கூறப்பட்டது.
இந்த அறிவிப்பை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் இணை பேராசிரியர் பாண்டியன் என்பவர், பொது நல வழக்கு தொடர்ந்தார். காலியிடங்களை அறிவிக்காமல், இடஒதுக்கீட்டை பின்பற்றாமல், விண்ணப்பங்களை வரவேற்காமல், நேர்முக தேர்வுக்கு அழைப்பு விடுத்தது சட்டவிரோதமானது என மனுவில் கூறப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் டி.ராஜா, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில், அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, நேர்முகத் தேர்வு முடிந்து, அக்., 22ல் நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.