மாதவரம் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு ஓடிய சொகுசு கார் மோதிய சம்பவத்தில், காயமடைந்த ஐவரில் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் பலியானார்.
சென்னை, மாதவரம் பால்பண்ணை அடுத்த பெரிய மாத்துார், காமராஜர் சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு சந்திப்பில், நேற்று முன்தினம் மாலை, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த 'இன்னோவா' சொகுசு கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. பின்னர், நிற்காமல் சென்ற அந்த கார் அருகில் உள்ள வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த பெண்கள் மீதும் மோதியது. கார் ஓட்டுனர் தப்பினார்.
விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பெரிய மாத்துார், காமராஜர் சாலையைச் சேர்ந்த மகேஷ்குமார், 42; அவரது மனைவி கலா, 36; மற்றும் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த சாந்தி, 36, சுகுணா, 41, அவரது மகள் கலைச்செல்வி, 15, ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.அனைவரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
அதில் சாந்தி உயிரிழந்தார். மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் விசாரணையில், இந்த விபத்தில் சிறிய காயங்களுடன் தப்பிய, 65 வயது கார் ஓட்டுனர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரிந்தது.
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய பதட்டத்தில், ஓட்டுனர் பிரேக் போட்டு அதை நிறுத்த முயன்று, தவறுதலாக 'ஆக்சிலேட்டரை' மிதித்துள்ளார். அதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த மூன்று பெண்கள் மீதும் மோதியது தெரியவந்தது. சிகிச்சை பெறும் கார் ஓட்டுனரை கைது செய்ய, போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.