நகரி : வடகிழக்கு பருவ மழையால், சித்துார் மாவட்டத்தில் 529 ஏரிகள் உடைந்து, தண்ணீர் வெளியேறியது.
ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் முழுதும், 15 நாட்களாக கன மழை பெய்தது. சித்துார், காளஹஸ்தி, திருப்பதி, நகரி, புத்துார், சத்தியவேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால், கால்வாய் வழியே ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது; 100க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின.இதில் சித்துார் மாவட்டத்தில் உள்ள பெரிய, சிறிய ஏரிகளில் கரைகள் மற்றும் மதகுகள் சீரமைக்கப்படாததால், 529 ஏரிகள் உடைந்து, தண்ணீர் வீணாக சென்றது.
கடந்த, 21ம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக, ஒரே நாளில் 65 ஏரிகள் உடைந்தது.விவசாயிகள் பயிரிட்ட நிலம், குடியிருப்புகளில் வெள்ள நீர் சென்றது. இதனால், 1,500 ஏக்கர் நெற்பயிர், வெள்ளத்தால் சேதமடைந்தன.'உடைந்த ஏரிக்கரைகள் ஓரிரு மாதங்களில் சீரமைக்கப்படும்' என, பொதுப்பணித் துறை மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் தெரிவித்தார்.