சிவகாசி : சிவகாசி பகுதியில் பெய்த மழையால் ஆனைக்குட்டம் அணைக்கு அதிகளவு நீர் வரத்து ஏற்பட,ஷட்டர்கள் பழுதால் முழுமையாக நிரம்புவதற்கு முன் 18 அடியை எட்டியதும் மதகுகள் அனைத்தும் திறக்கப்பட்டு 6 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
பிளவக்கல் அணை நிரம்பும்போது அதன் உபரி நீர் பல்வேறு கண்மாய்களை நிரப்பிஆனைக்குட்டம் அணைக்கு வரும். இந்த அணை பாசன வசதியை விட ,விருதுநகர், திருத்தங்கல் நகரின் குடிநீர் ஆதாரமே உள்ளது . இதுதவிர அணையை சுற்றிய கிராமங்களில் விவசாயம், குடிநீர் தேவைக்கும் போர்வெல் மூலம் நீர் ஆதாரமாக பயன்படுகிறது. நேற்று முன் தினம் பெய்த மழையில் 22 கொண்ட அணை 18 அடியாக உயர 22 அடியை எட்டுவதற்கு முன்னரே நேற்று முன் தினம் இரவு மதகு திறக்கப்பட்டது. நேற்று காலையில் மேலும் 3 மதகுகள் திறக்கப்பட்டது. இதன் மூலம் 6 அடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மதியம் 1:00 மணிக்கு அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டது. தற்சமயம் அணையில் 12அடி தண்ணீரே உள்ளது. முழுமையாக நிரம்பினால் ஷட்டர் பழுதாகி அனைத்து தண்ணீரும் வெளியேறி விடும் என்பதால் மதகுகள் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே அணையினை கலெக்டர் மேகநாதரெட்டி , சிவகாசி காங்., எம்.எல்.ஏ., அசோகன் பார்வையிட்டனர்.*சிவகாசி , சுற்று பகுதிகளில் கனமழையால் வண்ணாங்குளம், சித்துராஜபுரம், ஆனைக்குட்டம், மீனாட்சிபுரம் கண்மாய்கள் நிறைந்தது. ஆனையூர் உள்ளிட்ட கண்மாய்களில் பாதியளவு தண்ணீர் வந்துள்ளது. கிராமங்களில் உள்ள பெரும்பான்மையான ஊரணிகள் நிறைந்துள்ளன.ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ,மேற்கு தொடர்ச்சி மலை
அடிவாரப் பகுதிகளில் கனமழை பெய்தில் மம்சாபுரம் ரங்கப்ப நாயக்கர், வாலாங்குளம், வேப்பங்குளம், வாழைக்குளம் கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து, பெரியகுளம் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது.மறவன்குளம் கண்மாயிலிருந்து மொட்ட பெத்தான் , திருமுக்குளத்திற்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. செண்பகத்தோப்பு பேயனாற்றில் நீர்வரத்து ஏற்பட்டதால் மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.சாத்துார்:சாத்துார் , சுற்று கிராமங்களில் தொடர் மழை,மேற்கு தொடர்ச்சி
மலையில் பெய்த மழையால் வைப்பாறு ,அர்ஜூனா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.வைப்பாறு நதியில் உள்ள வெம்பக்கோட்டை அணையில் ஒரே நாளில் 13 அடி தண்ணீர் வந்தது. வல்லம் பட்டி கண்மாய், கொம்மங்கியாபுரம், வேண்டாங்குளம், சின்னக்கொல்லபட்டி கண்மாய் முழு அளவை எட்டியது. அர்ஜூனா நதியில் உள்ள கோல்வார்பட்டி அணையில் ஆறு அடி தண்ணீர் தேங்கியுள்ளது. இருக்கன்குடியில் அர்ச்சுனா நதி வைப்பாறு நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இருக்கன்குடி அணையில் ஒரே நாளில் 16
அடி தண்ணீர் தேங்கியது.பல ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பலத்த மழை காரணமாக ஆறு ,கண்மாய்களில் தண்ணீர் தேங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதற்கு தீர்வுதான் என்னஆனைகுட்டம் அணையில் உள்ள 9 ஷட்டர்களில் பெரும்பாலானவை சேதமடைந்துள்ளது. இதனால் அணைக்கு மழை நீர் வந்தாலே வெளியேறி விடுகிறது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு இதை பழுது பார்ப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடந்தது. முழுமையாக பழுது பார்க்காததால் தற்போதும் மழை நீர் வரும் போது கசிவு தொடர்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையில் அதிகளவு தண்ணீர் வந்த நிலையில் நான்கு ஷட்டர்களின் வழியாக தண்ணீர் கசிந்து வெளியேறியது. இதை தொடர்ந்து துாத்துக்குடியில் உள்ள முத்து குளிப்பவர்களால் தற்காலிகமாக ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட்டது.
ஆனாலும் தண்ணீர் கசிந்து வெளியேறுகிறது .நேற்று முன் தினம் மழையில் நீர் வரத்து அதிகரிக்க அணை நிரம்பும் நிலை உருவானது . அணை நிரம்பினால் ஷட்டர்கள் முழுவதும் பழுதடைந்து விடும் என்பதால் அணைக்கு வந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.இதே நிலை ஆண்டுக்கணக்கில் தொடர்வதால் அணையில் நீரை சேமிக்க முடியாத நிலை உருவாகிறது.இதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.