கோவை: வரும் வாரத்தில் கோவையில், இடியுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக, வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த வாரம் தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும், மழைப்பொழிவு இருந்தது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த, 23ம் தேதி, 10.8 மி.மீ., மழைப்பொழிவு பதிவானது.அதிகபட்ச வெப்பநிலை கடந்த, 23ம் தேதி 31 டிகிரி செல்சியசாக இருந்தது. அடுத்த ஐந்து நாட்களில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, கனமழை பொழிய வாய்ப்புள்ளது.
நாளை, 35 மி.மீ., வரை மழைப்பொழிவு இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசாக இருக்கும். காற்றின் வேகம், 10 கி.மீ., வரை இருக்கும்.இதனால் கரும்பு, வாழைக்கு முட்டு கொடுப்பது அவசியம். மழை, காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் என்பதால், கால்நடைகளுக்கு உலர் தீவனங்கள் கொடுக்க வேண்டும். போதிய வடிகால் வசதிகளை, விவசாயிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.