அந்தியூர்: பர்கூர்மலையில், 13வது நாளாக நேற்றும் கனரக வாகனங்கள் செல்ல தடை தொடர்ந்தது. பர்கூர்மலையில் தொடர் மழையால், கடந்த, 14ம் தேதி மலைப்பாதையில் செட்டிநொடியில் மண் சரிவு ஏற்பட்டது. வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் சரிந்த பாறைகள், மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அந்தியூர் - கர்நாடகா சாலையில் கனரக வாகனங்களை தவிர, இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்பட்டது. 13வது நாளாக நேற்றும் தடை தொடர்ந்தது. இதனால் பஸ் வசதி இல்லாமல், பர்கூர்மலை வனப்பகுதி மக்கள், அன்றாட தேவை, அடிப்படை வசதிகளுக்காக பிக்-அப் வேன்களில் சென்று வருகின்றனர். இந்த அவல நிலைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண் சரிவு, பாறைகளை அகற்றும் பணி மெத்தனமாக நடக்கிறது. அதுவுமின்றி மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருப்பதால், கனரக வாகனங்களை அனுமதித்தால், மேலும் மண் சரிவுக்கு வாய்ப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதன் காரணமாகவே கனரக வாகனங்கள் செல்ல, தடை நீடிப்பதாக தெரிகிறது. இதனால் தமிழகப்பகுதியில் இருந்து செல்லும் வாகனங்கள், சத்தி, திம்பம் மலைப்பகுதி வழியாகவும், கர்நாடக பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், மாதேஸ்வரன் மலை வழியாக, கொளத்தூர், மேட்டூர் வழியாக தமிழகம் வருகின்றன.