ஈரோடு: ஈரோடு, பெரியவலசு, நேதாஜி நகரை சேர்ந்தவர் தாமஸ், 38; சீட் கவர் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரின் மனைவி நான்சி. தம்பதியரின் மகன் திமூன் அந்தோணி, 4. நேற்று காலை வீட்டு முன்புள்ள தரைத்தள தொட்டியில், தண்ணீர் உள்ளதா? என்று தொட்டியின் மூடியை நான்சி திறந்து பார்த்துள்ளார். முழுவதுமாக மூடாமல் பாதி மட்டும் மூடி சென்றுள்ளார். அப்போது விளையாட வந்த குழந்தை, தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டான். வீட்டுக்கு வந்த தாமஸ், குழந்தை எங்கே? என்று மனைவியிடம் கேட்டுள்ளார். அதன் பிறகே குழந்தையை நான்சி தேடினார். தண்ணீர் தொட்டி மூடி திறந்திருப்பதை பார்த்து, தாமஸ் சந்தேகமடைந்தார். தொட்டியில் எட்டி பார்த்தபோது குழந்தை இறந்து கிடந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.