ஈரோடு: ரேஷன் கடை ஊழியர் மீது, 5.50 லட்சம் ரூபாய், நான்கு பவுன் நகை பெற்றுக்கொண்டு, மோசடி செய்து விட்டதாக, பெண் புகாரளித்துள்ளார்.
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் கிராமம், உதயம் நகரை சேர்ந்தவர் செல்வி, 25; கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. குழந்தைகளுடன் ஈரோடு எஸ்.பி., அலுவலகத்துக்கு, நேற்று செல்வி வந்தார். அவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சிக்கரசம்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்தவர் கதிர்வேல். ரேஷன் கடை ஊழியர். இவரின் மனைவி வளர்மதி. கடந்த, 2019ல் வீடு கட்ட பணம் கேட்டனர். ரொக்கமாக, 5.50 லட்சம் ரூபாய், நான்கு பவுன் நகை கொடுத்தேன். திருப்பி தராததால் சத்தி போலீசில் கடந்த மாதம் புகாரளித்தேன். அப்போது இரண்டு தவணைகளாக தருவதாக, கதிர்வேல் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். ஆனாலும் பணம் தராமல், பொய் வழக்கு போட்டு, சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறார். உரிய நடவடிக்கை எடுத்து, பணம், நகையை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.