ஊட்டி: நீலகிரி மாவட்ட அரசு பஸ்களுக்கான உதிரி பாகங்கள் இல்லாமல் அவதிஅடைந்து வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் அரசு போக்குவரத்து கிளைகள் மூலம், 270 வழித்தடத்தில், 320 பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக இயக்கப்படும், 40 சதவீதம் பஸ்கள் மற்றும் கடந்த ஐந்தாண்டில் புதிதாக இயக்கும், 60 சதவீத பஸ்களுக்கு உதிரி பாகங்கள் கிடைக்காமல் பழுது அதிகரிக்கிறது.பஸ்களில் அன்றாடம் பயன்படுத்தும், பிரேக் லைனர், டிரம், ஸ்பிரிங் கட், இன்ஜின் ஆயில், ஸ்பேர் டயர் உள்ளிட்ட குறைபாடுகள் குறித்து அலுவலக பதிவேட்டில் எழுதி தெரிவித்தும் மாத கணக்கில் சரி செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.பழுதடைந்த பஸ்களில், பயணியர் ஆபத்துடன் பயணம் செய்யும் அவலம் உள்ள நிலையில், அதிகாரிகளின் நிர்பந்தத்தால் பஸ்கள் இயக்குவதாக டிரைவர், கண்டக்டர்கள் தெரிவிக்கின்றனர். புதிய பஸ்கள் உட்பட, 70 சதவீத பஸ்களின் மேற்கூரை பெயர்ந்து, மழை காலத்தில் பஸ்சிற்குள் குடைபிடித்தாலும், பயணியர் நனைந்தபடியே செல்லும் அவலம் நீடிக்கிறது.
9 பஸ்களின் எப்.சி., ரத்து!
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''ஊட்டி போக்குவரத்து கிளையில், எப்.சி.,க்கு வரும் பஸ்களில், சிறிய குறைபாடு இருந்தாலும் எப்.சி., வழங்குவதில்லை; சமீபத்தில், 9 பஸ்களின் எப்.சி., ரத்து செய்யப்பட்டது. அரசு பஸ்களின் குறைபாடு குறித்து மக்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.போக்குவரத்து கழக பொது மேலாளர் கணபதி கூறுகையில், ''பஸ்களில் குறைபாடு இருப்பது உண்மைதான். தற்போது, உதிரி பாகங்கள் படிப்படியாக வாங்கி, தேவையான அளவு வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.