திருவள்ளூர் அருகே 'மினி திருப்பாச்சி' 200 ஆண்டுகளாக சாணை தொழிலில் அசத்தும் அரிசந்திராபுரம் | திருவள்ளூர் செய்திகள் | Dinamalar
திருவள்ளூர் அருகே 'மினி திருப்பாச்சி' 200 ஆண்டுகளாக சாணை தொழிலில் அசத்தும் அரிசந்திராபுரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

28 நவ
2021
01:26

'தமிழகத்தின் வடமாவட்டங்களில் வசிப்போர் பயன்படுத்தும் கத்தி, அருவாமனை ஆகிய இரும்பு பொருட்கள் நாங்கள் தயாரித்ததே' என, 200 ஆண்டுகளாக சாணை பிடித்தல் தொழில் செய்யும் அரிசந்திராபுரம் கிராமத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த, அரிசந்திராபுரம் கிராமத்தில், 200 ஆண்டுகளாக சாணை பிடித்தல் தொழிலே பிரதானம். இங்கு, 80 சதவீதம் பேர், சாணை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்கும் தொழிலை செய்கின்றனர்.
நலிந்து வரும் சாணை பிடிக்கும் தொழிலை செய்யும் இஸ்லாமியர்களான இவர்கள், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இருசக்கர வாகனத்தில் சுற்றியபடி இத்தொழில் செய்கின்றனர்.
தொழில் குறித்து, அரிசந்திராபுரம் ஷாஜகான், 30, கூறுகையில், ''அதிகாலை 4:00 மணிக்கு புறப்படுவோம். திருவாலங்காடு ரயில் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் 8 - 10 பேர் சந்தித்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரிந்து செல்வோம்,'' என்றார்.
பிற மாவட்டங்கள், மாநிலங்களுக்கு 50 பேர் குழுவினர் செல்கின்றனர். மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி பின் வீடு திரும்புகின்றனர்.மொத்தம் 1,800 பேர் இத்தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், 1,100 பேர் தொழில் செய்கின்றனர்.வெளியூர் வியாபாரத்திற்கு சென்றால் சாதாரண அறைகளில் நான்கு பேர் தங்குகின்றனர்.
அடிக்கடி அவர்கள் செல்வதால், அறைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதில்லையாம்.வருமாய் பற்றி ஷாஜகான் கூறுகையில், ''ஒரு நாளைக்கு, 400 -- 900 ரூபாய்க்குள் கிடைக்கும். அறை வாடகை உணவுக்கு 200 ரூபாய் செலவழிப்போம். யாரிடமும் கைக்கட்டி வேலை பார்க்காமல் சொந்த உழைப்பில் இருப்பது சந்தோசமாக இருக்கிறது,'' என்றார்.
மேலும், ''குடும்பங்களை பிரிந்து மாதக்கணக்கில் வெளியூரில் தங்குவோம். அப்போது அவர்களை நினைத்து மிகவும் ஏங்குவோம்; எல்லாம் குடும்பத்திற்கு தானே என, நாங்களே மனதை தேற்றிக்கொள்வோம்,''என்றார்.
இத்தொழிலை 12 ஆண்டுகளாக செய்யும் கரிமுல்லா கூறியதாவது: காய்கறி வெட்ட பயன்படும் கத்தி, சாணை பிடிக்க 20 ரூபாய்; அருவாமனை மற்றும் வெட்டு கத்திகளை சாணை பிடிக்க 40 -- 90 ரூபாய் வரை விலை வைப்போம். ஏழைகள் என்றால் குறைத்துக் கொள்வோம்.தோசை கல் 200 -- 460 ரூபாய்; கடாய் 150 -- 380, கரண்டி 120 -- 160 ரூபாய் வரை தருகிறோம்.
சாணை தொழில் நலிவடைந்து வருவதால், வீட்டு உபயோக பொருட்களையும் தயாரித்து விற்று வருகிறோம்.எங்கள் கிராமத்திலேயே 'டீலர்'கள் இருப்பதால் ஓரளவு லாபம் பார்க்க முடிகிறது.கும்பகோணம், தஞ்சாவூர் பகுதியில் எங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். சமையல் செய்து முடித்ததும், கடாய், தோசை கல்லை நீரில் கழுவியதும், கொஞ்சம் எண்ணெய் தடவினால் துரு பிடிக்காது; பொருட்களின் ஆயுளும் அதிகரிக்கும்.
தொழில் செய்து லாபம் ஈட்டுவதோடு, வாடிக்கையாளர்களின் மன திருப்தியும் முக்கியம். எனவே, எங்கள் பொருட்களை தரமானதாக கொடுக்கவே முயற்சி செய்கிறோம். முடிந்தளவு எங்களை போன்ற தொழிலாளிகளிடம், பேரம் பேசாமல் வாங்கினால் மகிழ்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X