வாழப்பாடி: வாழப்பாடி, புழுதிக்குட்டையில், 67.25 அடி உயரத்தில் ஆனைமடுவு அணை உள்ளது. அந்த அணை நீர்மட்டம், கடந்த, 24 காலை, 65.50 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் உபரிநீர் முழுதும் வசிஷ்ட நதியில் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், அணை நிரம்பும் முன்பே, வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராமங்களில் உள்ள ஏரி, தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியதால், வசிஷ்ட நதியில் திறக்கப்படும் உபரிநீர் பயன்பாடின்றி பாய்ந்து கடலில் கலக்கிறது. இதனால், உபரிநீரை அணையின் வலது, இடது பாசன வாய்க்காலில் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பலன் கிடைக்காததால், உபரிநீர் பாசன வாய்க்காலில் திறக்க கோரி, 25ல் ஆனைமடுவு அணையை முற்றுகையிட்டனர். இதனால், அணை பாசன விவசாயிகளுடன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதாராணி உள்ளிட்ட அதிகாரிகள், ஆனைமடுவு அணை அலுவலகத்தில் நேற்று பேச்சு நடத்தினர். முடிவில், விவசாயிகள் கோரிக்கை குறித்து மனுக்களை பெற்ற அதிகாரிகள், கலெக்டர் மூலம், அரசுக்கு அனுப்பி, அரசாணை பெற்று உபரிநீரை வாய்க்காலில் திறக்க வழி செய்யப்படும் என உறுதியளித்தனர்.